https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/ragul.jpg

சீன எல்லையில் பதற்றம்: மத்திய அரசு தெளிவுபடுத்த ராகுல் வலியுறுத்தல்

by

இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனாவுக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்திய, சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து மத்திய அரசு எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இது, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.

எனவே, எல்லைப் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

லடாக், வடக்கு சிக்கிம் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்துள்ளது. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியுள்ளது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.