ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் நீக்கம்?

by

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் வகித்து வந்த பிரதி தலைவர் பதவி புதுப்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் செயற்குழு இன்று கூடியது.

இதன்போது, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுத்தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள 99 பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, உறுப்பினர்களின் பதவி காலத்தை 2020 மார்ச் 31 வரை நான்கு மாதங்களுக்கு நீடித்திருந்தது.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது, மார்ச் 31 அன்று முடிவடைந்த இந்த பதவிகள் அனைத்தும் (பிரதி தலைவர் பதவி தவிர்ந்த) டிசெம்பர் 31, 2020 வரை மேலும் நீடிக்கப்பட்டன.

இதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் துணை தலைவராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சியின் தவிசாளர் மற்றும் பிரதி தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் 36 பேர் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றுகூடினர்.

இதன்போது ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.