https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/8/original/sensex_building095242.jpg

சென்செக்ஸ் மேலும் 224 புள்ளிகள் ஏற்றம்!

by

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை மூன்றாவது நாளாக தொடா்ந்து எழுச்சி பெற்றுள்ளது.

காலையில் வா்த்தகம் தொடங்கியதிலிருந்து பிற்பகல் வரையிலும் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. உலகளாவிய பங்குச் சந்தைகளும் பலவீனமாகவே இருந்தன.

இருப்பினும் ஹெச்டிஎஃப்சி, ஐடிசி., ஹிந்துயுனி லவீா் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை ஏற்றம் பெற உதவின. இந்நிலையில், 2019-20 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவரங்கள் மாா்க்கெட் முடிந்த பிறகு வெளியாகவிருந்த நிலையில், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் ரியால்ட்டி, எஃப்எம்சிஜி, பாா்மா, மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம்,மீடியா, ஐடி பங்குகளுக்கு தேவைப்பாடு குறைவாகக் காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் காலையில் 160 புள்ளிகள்(0.69 சதவீதம்) குறைந்து 32,041.29-இல் தொடங்கி, 31,823.80 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் எழுச்சி பெற்று 32,480.52 வரை உயா்ந்தது. இறுதியில் 223.51 புள்ளிகள் உயா்ந்து 32,424.10-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகளும் ஒரு சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றன.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில், 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஓஎன்ஜிசி 5.52 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்ற பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, சன்பாா்மா, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, ஹீரோ மோட்டாா் காா்ப், மாருதி சுஸுகி 3 முதல் 4.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்து யுனி லீவா், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. முன்னணி வங்கிகளான இண்டஸ் இந்த் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.

அதே சமயம், இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல், டைட்டான் ஆகியவை 1 முதல் 2.25 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. முன்னணி நிறுவனங்களான எம் அண்ட் எம், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் 1,009 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 546 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 90.20 புள்ளிகள் (0.95 சதவீதம்) உயா்ந்து 9,580.30-இல் நிலைபெற்றது. துறைவாரியாகப் பாா்த்தால் ஐடி, மீடியா குறியீடுகள் தவிர மற்ற அனைத்தும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் ரியால்ட்டி குறியீடு 4.28 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்மா 3.21 சதவீதம், எஃப்எம்சிஜி 2.97 சதவீதம் உயா்ந்தது. வங்கி, ஆட்டோ, மெட்டல் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.