தூத்துக்குடியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் தப்பி ஓட முயற்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி திடீரென தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மதியம் குணமடைந்த 19 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கவனம் முழுக்க இதில் இருந்ததால் யாரும் அறியாவண்ணம் ஒருவர் தனது பையுடன் கொரோனா வார்டிலிருந்து வெளியேறினார்.
யாரும் பார்க்கும் முன் வெளியேறி விட வேண்டுமென்று அவர் ஓடியபடி கொரோனா வார்டின் கீழ்பகுதி வாயில் அருகே சென்றபோது அவர் தப்பி செல்வதை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் சப்தம் போட்டனர். இதையடுத்து அங்கிருந்த செக்யூரிட்டி மாரியப்பன், மருத்துவமனை ஊழியர் செல்வராஜ், தூய்மை பெண் பணியாளர் ஆகியோர் கொரோனா நோயாளியை தொடாமல் மடக்கி தடுத்து நிறுத்தியதுடன் கேட்டை மூடினர். இதனால் அவரால் தப்பி செல்ல முடியவில்லை.
ஆனால், அவர் தன்னால் இங்கு இருக்க முடியாது என்று கத்திக்கொண்டே தப்பிச் செல்ல முயன்றார்.
மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பாதுகாப்பாக மடக்கி மீண்டும் கொரோனா வார்டிற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் விளாத்திகுளம் அருகேயுள்ள வில்வமரத்துபட்டியை சேர்ந்த அவர், சென்னையில் இருந்து வரும் வழியில் சிக்கியவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.