தமிழகத்தில் நோய் அறிகுறியை கண்டுபிடிப்பதில் மெத்தனம்; 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 2-வது நாளில் பலி: அடுத்த 10 நாளில் ஏற்படப்போகும் அபாயம் என்ன?
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 50% பேர் சிகிச்சையில் சேர்ந்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இவர்களுக்கு முன்கூட்டியே பரிசோதனை நடத்தி கொரோனா தொற்றை கண்டுபிடித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். அடுத்த 10 நாட்களுக்குள் ஏற்படும் ஆபத்தை எச்சரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் உயிரிழப்பு 150-ஐ தாண்டிவிட்டது. அவர்களில் 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. எந்த எண்ணிக்கை மட்டும் 75-க்கும் மேல் இருப்பதாக தெரிவிக்கிறது அரசின் புள்ளி விவரம்.
இவர்களுக்கு நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி தொற்றை கண்டுபிடித்து இருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்கின்றனர் மூத்த மருத்துவர்கள். சிகிச்சைக்கு சேர்ந்த 1-வது நாளில் 25 பேரும், 2-வது நாளில் 27 பேரும், 3-வது நாளில் 18 பேரும் 4-வது நாளில் 11 பேரும், 5-வது நாளில் 7 பேரும், 6-வது நாளில் 9 பேரும், உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அதிகபேர் நடுத்தர வயதுடையவர்கள். 20 முதல் 39 வயதுக்குள் 8 பேரும், 40 முதல் 49 வயதுக்குள் 21 பேரும், 50 முதல் 59 வயதுக்குள் 40 பேரும், பலியாகியுள்ளனர். எஞ்சியவர்கள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.
பாதிப்பு பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பது போன்றே உயிரிழப்பும் இங்கு தான் அதிகம் நோய் தொற்றுக்கு ஆளான 13 ஆயிரம் பேரில் 110-க்கும் அதிகமானோர் சென்னையில் மட்டும் பலியாகிவிட்டனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் தலைமை செவிலியரும் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பில் அவர் இறந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ தீவிர சர்க்கரை நோய் பாதிப்பே உயிரிழப்புக்கு காரணம் என்கிறது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஒருவருக்கு எப்படி அரசு பணி நீட்டிப்பு வழங்கியது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
தலைமை செவிலியருக்கு நேர்ந்த கதியை எண்ணி உடன் பணியாற்றும் செவிலியர்கள் கதி கலங்கி போய் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 0.7 சதவிகிதமே என கூறி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தேசிய சராசரி 3%-ஆக உள்ளதை சுட்டி காட்டுகிறார். இந்நிலையில் அடுத்த 10 நாட்களுக்குள் அரசு மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், கவனிப்பு மையங்களில் கூடுதலாக 8,100 படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். எனவே அடுத்த 10 தினங்கள் மிகவும் ஆபத்தானதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.