https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2548303.jpg

அலட்சிய,டீன் மீது நடவடிக்கை: நர்ஸ்கள் சங்கம் போர்க்கொடி

1

சென்னை : 'சென்னையில் உயிரிழந்த செவிலிய கண்காணிப்பாளருக்கு, கொரோனா தொற்று இல்லை எனக்கூறும் தமிழக அரசு, மருத்துவ அறிக்கையில், கொரோனா பாதிப்பு என எழுதி, அதற்கான சிகிச்சை அளித்தது ஏன்' என, செவிலியர்கள் சங்கம் கேள்வி எழுப்பிஉள்ளது.
'அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை, 'டீன்' மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும், அச்சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

பணி நீட்டிப்பு

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பளராக இருந்தவர், ஜான் மேரி பிரிசில்லா, 58. மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வு பெறவிருந்த நிலையில், கொரோனா ஒழிப்புக்காக, அவருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், உடல் நலக்குறைவால், அதே மருத்துவமனையில் உள்ள, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்; 27ம் தேதி இரவு உயிரிழந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, மருத்துவமனை டீன், ஜெயந்தி தெரிவித்தார்.
இது, தங்கள் உயிரை பணயம் வைத்து, மக்களுக்காக சேவையாற்றி வரும், செவிலியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு செவிலியர் சங்கத்தின் மாநில பொது செயலர், வளர்மதி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
செவிலியர் கண்காணிப்பாளர், சில தினங்களுக்கு முன், மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகளுடன், கொரோனா வார்டில், பரிசோதனைக்கு முன் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். பின், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என, தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படாதது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது.தொடர்ந்து கொரோனா வார்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மருத்துவ அறிக்கையில், 'கொரோனா பாசிட்டிவ்' என, குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், பரிசோதனையில் பாதிப்பில்லை என்பது முரண்பாடாக உள்ளது. இதுகுறித்து, அரசிடம் பேச்சு நடத்திஉள்ளோம்.

தீவிர சிகிச்சை

* பரிசோதனைக்கு முன், கொரோனா வார்டில் ஏன் அனுமதிக்கப்பட்டார் என்பதை, மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்
* கொரோனா பாதிப்பு இருந்ததா; இல்லையா என்பதை, ஏன் தெளிவுப் படுத்தவில்லை
* இரண்டு பரிசோதனை முடிவுகளும், 'நெகடிவ்' என்று வந்திருந்தால், அவரை ஏன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றவில்லை
* செவிலியருக்கு கொரோனா தொற்று இல்லை என, பரிசோதனை முடிவு வந்த பின், மருத்துவ அறிக்கையில், கொரோனா பாதிப்பு என, எழுதப்பட்டிருந்தது ஏன்...
எங்களது கேள்விகளுக்கு மருத்துவமனை முதல்வர் சரியான விளக்கம்அளிக்க மறுத்தது ஏன்...
* சென்னையில் உள்ள, பெரிய மருத்துவமனையில் பணிபுரியும் செவிலிய கண்காணிப்பாளருக்கு, அவர் பணியாற்றிய மருத்துவ
மனையிலேயே, சிகிச்சை அளிப்பதில் இவ்வளவு அலட்சியம் எனில், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பணியாற்றும் செவிலியர்களின் நிலை என்ன...
* இனிமேல் எப்படி, செவிலியர்கள் நம்பிக்கையுடன் கொரோனா வார்டுகளில் பணி செய்வர்
* எங்களது செவிலியர் கண்காணிப்பாளரின் சிகிச்சை முறைகளில் அலட்சியமாக இருந்த, மருத்துவமனை டீன், ஜெயந்தி மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்; டீனுக்கு கண்டனத்தையும் பதிவு செய்
கிறோம்
* கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப் பயன்களையும் தாமதிக்காமல் வழங்கி, அவரின் வாரிசு ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்
* வருங்காலங்களில், கொரோனா வார்டுகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு கிடைக்க, அரசு உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE