https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2548147.jpg

தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்:முதல்வர் கடிதம்

சென்னை : தமிழகத்தில், தொழில் துவங்க வரும்படி, 13 முன்னணி மின்னனுவியல் நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்.,கடிதம் எழுதி உள்ளார். கொரேனா வைரஸ் பரவல், உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள, தொழில் நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் மாற்ற முடிவு செய்துள்ளன.

அந்த முதலீடுகளை ஈர்க்க, தலைமை செயலர் தலைமையில், சிறப்பு பணிக்குழுவை, தமிழக முதல்வர் அமைத்துள்ளார். சமீபத்தில், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில் துவங்க, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. உலகம் எங்கும் உள்ள முதலீட்டாளர்கள், தமிழகத்தில் தொழில் துவங்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது, தமிழகத்திற்கு முதலீடு செய்ய வரும்படி, 13 மின்னணுவியல் நிறுவனங்களின் தலைவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர், டிம்குக், சாம்சங் நிறுவனத்தின் தலைவர், கிம் குன் சுக், அமேசான் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர், ஜெப் பெசாஸ், எச்.பி., நிறுவனத்தின் தலைவர், என்ரிக் உள்ளிட்டோருக்கு, இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், புதிய தொழில் துவங்க, தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும்; தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

ரூ.300 கோடி நிதியுதவி திட்டம்: துவக்கினார் முதல்வர் இ..பி.எஸ்,

சென்னை,: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரக தொழில் மேம்பாட்டிற்காக, 300 கோடி ரூபாயில், கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, கிராமப்புற தொழில்களை மேம்படுத்த, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தனி நபர்கள், உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, மாற்றுத் திறனாளிகள்.நலிவுற்றோர் மற்றும் புலம் பெயர்ந்த இளைஞர்கள், புதிதாக தொழில் துவங்க, கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், 300 கோடி ரூபாயில், 1.39 லட்சம் பயனாளிகள் பயன் பெறும் வகையில், செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் விபரம்:

* நீண்ட கால தனி நபர் தொழில் கடனாக, 31 ஆயிரத்து, 952 பேருக்கு, 159.76 கோடி ரூபாய், வழங்கப்படும். மொத்தமுள்ள, 1,598 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள, 31 ஆயிரத்து, 960 பேர் பயன் பெறும் வகையில், ஒரு முறை மூலதன மானியமாக, குழு ஒன்றுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வீதம், 23.97 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* மேலும், 240 தொழில் குழுக்களுக்கு, தலா, 1.50 லட்சம் ரூபாய் வீதம், 3.60 கோடி ரூபாய், ஒரு முறை மூலதன மானியமாக வழங்கப்படும்.

* புலம் பெயர்ந்து, மீண்டும் திரும்பி வந்த, 5,010 இளைஞர்கள், தொழில் துவங்க, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் வழியாக, தலா, 1 லட்சம் ரூபாய் வீதம், 50.10 கோடி ரூபாய், நீண்ட கால கடனாக வழங்கப்படும்* ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு, 500 பேர் வீதம், 37 ஆயிரத்து, 500 பேர் பயன் பெறும் வகையில், 75 உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு, தலா, 10 லட்சம் ரூபாய் என, 7.50 கோடி ரூபாய், மூலதன மானியமாக வழங்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கையர், ஆதரவற்றோர் உள்ளிட்ட, நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக, 31 ஆயிரத்து, 952 பேரை தேர்வு செய்து, தொழில் மூலதன நிதியாக, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் வழியாக, 49.92 கோடி ரூபாய், நீண்ட கால கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், முக கவசம். ஒரு உற்பத்திகிருமி நாசினி, கை கழுவும் திரவ சோப்பு, ஆடைகள் தயாரித்தல், பால்வள மேம்பாடு, கால்நடைகள் வளர்த்தல், சிறு உணவகங்கள் நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை செய்தல்.மளிகைக் கடை வைத்தல், அரவை மாவுத் தொழில், உலோக பொருட்கள் தயாரித்தல், செயற்கை ஆபரணத் தொழில் உட்பட, பல்வேறு தொழில்கள் மேம்பாட்டிற்கு, சிறப்பு நிதியுதவியும் வழங்கப்படும்.இத்திட்டத்தை, தலைமை செயலகத்தில், முதல்வர் துவக்கி வைத்து, ஐந்து பயனாளிகளுக்கு, சிறப்பு நிதியுதவி வழங்கினார். அமைச்சர் வேலுமணி, தலைமை செயலர் சண்முகம் பங்கேற்றனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE