படமல்ல பாடம்: பொன்மகள் வந்தாள் பட விமர்சனம்
by எழில்ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ்ப் படங்களில் பொன்மகள் வந்தாள் படத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு பெரிய நடிகை, ஒரு பெரிய நிறுவனம் பங்கேற்ற ஒரு தமிழ்ப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது இதுவே முதல்முறை. ஆனால் அப்படியொரு சிறப்பம்சம் கொண்ட இந்தப் படம், படத்தின் உள்ளடக்கத்தில், கதை சொல்லலில் எந்தளவுக்கு ரசிகர்களை அசத்தியது என்று பார்த்தால் ஏமாற்றம் தான்.
குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகளைக் கதையாகக் கையாண்டுள்ளார் இயக்குநர் பிரெட்ரிக். உண்மையில் நாட்டுக்குத் தேவையான கருத்துதான். ஆனால் இதைக் கதையாக, திரைக்கதையாக மாற்றுவதில்தான் படம் நிறைய தடுமாறியுள்ளது.
ஊட்டியில் வசிக்கும் வடநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தைகளைக் கடத்தி கொல்வதாகப் பரபரப்பு ஏற்படுகிறது. பிறகு, முடிந்துபோன இந்த வழக்கை 15 வருடங்கள் கழித்து ஜோதிகா மீட்டெடுக்கிறார். ஒரு வழக்கறிஞராக, மறைந்துபோன வடநாட்டுப் பெண்ணின் களங்கத்தைத் துடைக்கக் களமிறங்குகிறார். இதனால் உள்ளூர் மக்களின் சாபத்துக்கு ஆளாகிறார்.
கதை இப்படியொரு சுவாரசியப் பின்னணியுடன்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் இந்த சுவாரசியத்தைத் தக்கவைத்துக்கொள்வதில்தான் அதன்பிறகு படத்தில் பெரும்பாலும் இடம்பெறுகிற நீதிமன்றக் காட்சிகள் தவறவிட்டு விடுகின்றன.
படத்தின் ஆரம்பத்திலேயே தியாகராஜன் கதாபாத்திரம் தான் வில்லன் எனத் தெரிந்துவிடும்போது வழக்கின் பெரிய முடிச்சும் அவிழ்ந்துவிடுகிறது. அதுவும் கடைசிக்காட்சியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அவர் மாட்டிக்கொள்வது திரைக்கதையின் பலவீனத்தை வெளிப்படையாக உணர்த்துகிறது. வழக்கில் உள்ள ரகசியங்களை ஜோதிகா கண்டுபிடித்து வெளியே கொண்டுவருவதில் பெரிய ஆச்சர்யங்களோ அசத்தல்களோ இல்லை.
ஜோதிகா எதற்காக இந்த வழக்கில் போராடுகிறார், கடைசியில் ஜோதிகா என்பவர் யார் எனப் படத்தில் உருப்படியாக இரு திருப்பங்கள் தான். ஆனால், இந்த இரு திருப்பங்களாலும் முழுப் படத்தையும் தாங்க முடியாமல் போய்விடுகிறது.
பார்த்திபன் வழக்கின் உள்ளே நுழைந்த பிறகு நமக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் பார்த்திபனாலும் காட்சிகளில் சுவாரசியத்தைக் கூட்ட முடியவில்லை. பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படம் முழுக்க மூத்த நடிகர்கள். இந்தக் கதைக்கு ராம்ஜியின் ஒளிப்பதிவு மிக நன்றாக அமைந்துள்ளது.
கதை, திரைக்கதையைப் பெரிதும் நம்பாமல் ஜோதிகா மற்றும் விழிப்புணர்வு வசனங்களையே இந்தப் படம் பெரிதும் நம்பியுள்ளது. படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் நடிக்கவேண்டிய கட்டாயம் ஜோதிகாவுக்கு. தன் திறமையை அவர் நன்கு வெளிப்படுத்தியிருந்தாலும் பல இடங்களில் தடுமாறும் வசன உச்சரிப்பு, காட்சியின் மீதான கவனத்தைத் திசை திருப்புகிறது.
குறைந்தளவு பரபரப்புக் காட்சிகள் கொண்ட இந்தப் படம், பெரும்பாலும் சோகமான காட்சிகளையே கொண்டிருப்பது பெரிய பலவீனம். கதை, திரைக்கதையும் உதவிடாதபோது அங்கு சோகக்காட்சிகளுடன் ரசிகர்களால் ஒன்றிணைய முடியாமல் போய்விடும். குழந்தைக் கடத்தல், குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமை பற்றியெல்லாம் எந்த அறிவுரையும் சொல்லாத ராட்சசன் படத்தைப் பார்த்தபோது எழுந்த ஒரு தாக்கம், ஏராளமான விழிப்புணர்வு வசனங்களைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஏற்படவில்லை.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் பக்கம் பக்கமாகக் கருத்துகளைக் கொட்டிக் குவிக்கிறார்கள். இது சரியா என நிச்சயம் விவாதிக்கப்படவேண்டியது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் அவ்வளவு அழகாகக் கருத்துகள் கதையின் உள்ளே செலுத்தப்பட்டிருக்கும். இப்படிக் கதை வழியாக சொல்லப்படும் கருத்துகள் மட்டுமே ரசிகர்களிடம் எடுபடும். இல்லாவிட்டால் எந்தவொரு நல்ல நோக்கமும் மோசமான கதையால் எடுபடாமல் போய்விடும். எனவே தமிழ்த் திரையுலகினர், கருத்துகளை மட்டும் ரசிகர்களிடம் திணிப்பதற்குப் பதிலாகக் கதை, திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவது மட்டுமே திரையுலகின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் படமாக எடுக்கப்படுபவை வெறும் பாடமாகிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும்.
இந்தக் குறைகள் எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களில் சூர்யாவின் இந்த முயற்சி அடுத்து வரும் பல படங்களுக்கு பெரிய முன்னுதாரணமாக அமையும். அந்த வகையில் சூர்யாவுக்கும் பொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கும் பாராட்டுகள்.