புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்
புதுச்சேரி; புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி சார்பில் கோவில்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் புதுச்சேரியில் மதுபான கடைகளை திறந்த நிலையில் கோவில், மசூதி, சர்ச் உள்ளிட்டவற்றையும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில் புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும் என அவர் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.