https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2548102.jpg

துணிவான மற்றும் மாற்றத்துக்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டு!

மோடி அரசின், 2.0 ஆட்சி, மே 30, 2020ல், ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், நம் நாடு, பல முக்கிய முடிவுகளைக் கண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பிரிப்புடன், 370வது சட்டப்பிரிவு ரத்து; குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது; கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை திறமையாக கையாண்டு வருவது ஆகியவை, அரசின் உறுதியான தீர்மானம் மற்றும் சாதனையைக் காட்டுகின்றன.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, இந்தியா எடுத்த முயற்சிகள், உலகம் முழுவதும் பாராட்டை பெற்றுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இறப்பு, தொற்று இரட்டிப்பு வீதம் ஆகியவை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலகிலேயே குறைவாக உள்ளன.

43 நாடுகள்

இந்த நோய் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை எதிர்த்து போராட, பிரதமர் மோடி தலைமையிலான அரசு,20 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பில், ஒருங்கிணைந்த மற்றும் முன்னோக்கிய பொருளாதார நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த நிதியுதவித் திட்டம், ஏழைகளுக்கு நிவாரணம் அளித்து, முதலீட்டுக்கான வழியைத் திறந்து, எதிர்காலத்தில் போட்டிபோட தயாராகும் அளவுக்கு, வர்த்தக கட்டமைப்பை வழங்குகிறது. இது, பிரதமர் மோடியின் மந்திரமான, 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்துக்கு, அரசின் உறுதியைக் காட்டுகிறது.

'வாசுதேவ குடும்பகம்' எனப்படும், 'இந்த உலகம் ஒரே குடும்பம்' என்ற நம் பாரம்பரியத்துக்கு உண்மையாக இருக்க, கொரோனாவை எதிர்த்துப் போராட, 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, இந்தியா, 'ஹைட்ராக்சிகுளோரோகுயின்' உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை, நிபந்தனையின்றி வழங்கியுள்ளது. இவற்றில், 43 நாடுகள் இலவசமாக பெற்றுள்ளன.
கடந்த ஓராண்டில், இந்தியா, அனைத்து துறைகளிலும், புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்திய ரயில்வேக்கு, பாதுகாப்பு விஷயத்தில், 2019 - -20ம் ஆண்டு, மிகச் சிறந்த ஆண்டு. விபத்துகளில் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை. அனைத்து, ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளை இந்தாண்டு குறைத்த பிறகு, 1,274, ஆட்களுடன் கூடிய, லெவல் கிராசிங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்வே உறுதி

கடந்த, 2018 - -19ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது, 631 ஆகத் தான் இருந்தது.
புதிய ரயில் பாதைகள் அமைத்தது; இரட்டை ரயில் பாதை; அகலப்பாதையாக மாற்றியது போன்றவை, 2019- - 20ம் ஆண்டில், 2,226 கி.மீ.,க்கு அதிகரித்துள்ளது. இது, கடந்த, 2009- - 14ம் ஆண்டுகளில், ஆண்டுக்கு, 1,520 கி.மீ., என்று தான் இருந்தது.
கடந்த ஓராண்டில், சரியான நேரத்துக்கு ரயில்கள் புறப்படுவதும், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய ரயில்வே, 'நாட்டின் வாழ்விணைப்பு' என, இதனால் தான், சரியாக அழைக்கப்படுகிறது. இந்த சிறந்த பெயருக்கு ஏற்ப, ஊரடங்கு காலத்திலும், ரயில்வே சிறப்பாக செயல்பட்டுள்ளது.
உணவு தானியங்கள், நிலக்கரி, உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள், 24 மணி நேரமும் தடையின்றி கொண்டு செல்லப்பட்டதை, இந்திய ரயில்வே உறுதி செய்தது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதை உறுதி செய்ய, இந்திய ரயில்வே, 3,705 சிறப்பு ரயில்களை இயக்கி, 50 லட்சம் தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்றது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இதுவரை, 75 லட்சத்துக்கு மேற்பட்ட உணவு பொட்டலங்களை ரயில்வே துறை வழங்கியுள்ளது.
'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பி.பி.இ., எனப்படும் மருத்துவ பாதுகாப்பு உடைகள், கிருமிநாசினிகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முக கவசங்களை, ரயில்வே உற்பத்தி செய்தது.

ஏற்றுமதியை அதிகரிக்கவும், அதே போல, உள்நாட்டு தொழில்களின் நலனை பாதகாக்கவும், அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.ஏற்றுமதியை அதிகரிக்க, தற்போதுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும், தீர்வு காண்பதில் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், இந்தியா இணைந்து செயல்பட்டு, பேச்சு நடத்தி வருகிறது.

நட்பு நாடு

மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார பங்களிப்பு எனப்படும், 'ஆர்செப், அமைப்பில், இந்தியாவின் நலன்களை சமரசம் செய்து கொள்ள, பிரதமர் மோடி மறுத்து விட்டார். நியாயமான சூழலை உருவாக்க, பொருட்கள் குவிப்புக்கு எதிரான விசாரணையை தொடங்குவதற்கான சராசரி நேரம், 33 நாட்களாக குறைக்கப்பட்டது.
அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை, அதிகம் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், 89 பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டது; 13 பொருட்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த, எல்லா முடிவுகளும், ஏழை மக்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டன.
நம் சமூகத்துடன் ஆழ்ந்த பண்பாடு, ஆன்மிகம் மற்றும் பொருளாதார தொடர்புகளை இப்போது இருப்பது போலவே பராமரிக்க, அகர்பத்திகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த சிறிய நடவடிக்கை, அகர்பத்தி தயாரிக்கும் லட்சக்கணக்கான ஏழைகள், குறிப்பாக, பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது; உலகளவில், இந்தியா நம்பகமான நட்பு நாடாக உருவெடுத்தது.
இந்தியாவில், அன்னிய நேரடி முதலீடு, 18.4 சதவீதம் அதிகரித்து, 73.46 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி தயாரித்த, தொழில் தொடங்க சாதகமான நாடுகளின் தரவரிசையில், நம் இந்தியா, 14 இடங்கள் உயர்ந்து, 63வது இடத்தைப் பிடித்தது. முதலீட்டுக்கு உதவ, நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலையால், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க, எப்.டி.ஐ., கொள்கை திருத்தப்பட்டது.

கொரோனா நெருக்கடி, வர்த்தகர்களையும், நமக்கு முன்னணி வீரர்களாக காட்டியுள்ளது. வர்த்தகர்களின் நலனை எப்போதும் துாக்கி நிறுத்துவது தான் நம் அரசின் சித்தாந்தம். அதற்காகவே, தேசிய வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது.

கையாளும் திறமை

தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க, வரி சீர்திருத்தம் உட்பட பல நடவடிக்கைகள் இந்தாண்டு எடுக்கப்பட்டன. தேசிய, தொழில் தொடங்குதல் ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது.
கொரோனா பாதிப்புக்குப் பின், முன்னணி அடிப்படையில், 12 பிரிவுகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பிரிவுகளில், நம் தற்போதைய பலத்தை மேம்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, உலக ஏற்றுமதியின் பங்கை அதிகரிப்பது தான், நம் திட்டம்.
பர்னிச்சர், 'ஏசி,' தோல் மற்றும் காலணி ஆகிய, மூன்று துறைகளில் பணிகள், மேம்பட்ட நிலையில் நடந்து வருகின்றன.

மற்ற பிரிவுகளில், பணி தீவிரமாக நடந்து வருகிறது.துணிவுடனும், நாட்டுப்பற்றுடனும், சுய சார்பு இந்தியா கொள்கையில் தீவிரமாக இருந்த, வீர சாவர்க்கர், 'எதற்கும் தயாராவதில் அமைதி; ஆனால், செயல்பாட்டில் துணிவு போன்றவை, நெருக்கடி நேரத்தில் நம் கவனிப்பு வார்த்தைகளாக இருக்க வேண்டும்' என்றார்.இந்த வார்த்தைகள், நெருக்கடி நிலையை, நம் பிரதமர் மோடி, உறுதியுடனும், அமைதியான அணுகுமுறையுடனும், உண்மையான உலக தலைவரிடம் எதிர்பார்க்கும் தைரியத்துடனும் கையாளும் திறமையை, தெளிவாக படம் படித்து காட்டுகின்றன.

பியுஷ் கோயல், ரயில்வே மற்றும் மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர்
.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE