https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2548076.jpg

சீன எல்லை பிரச்னை:டிரம்பிடம் மோடி பேசவில்லை

2

புதுடில்லி:'சீன எல்லையில் நிலவும் பதற்றம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி, சமீபத்தில் எதுவும் பேசவில்லை' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய - சீன எல்லையில், சமீபகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவது, எல்லை பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது, கூடாரங்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், 'சீன எல்லை பிரச்னை தொடர்பாக, இந்திய பிரதமர் மோடியுடன், சமீபத்தில் தொலைபேசியில் பேசினேன். 'எல்லை பிரச்னை தொடர்பாக, அவர் அதிருப்தியில் உள்ளார். இந்திய - சீன எல்லை பிரச்னையில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என கூறினேன்' என, தெரிவித்திருந்தார்.

இது குறித்து, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் இரண்டு மாதங்களுக்கு முன், தொலைபேசியில் பேசினார்.அதற்கு பின், டிரம்ப் - மோடி இடையே எந்த உரையாடலும் நடக்கவில்லை. குறிப்பாக, இந்திய - சீன
எல்லை பிரச்னை தொடர்பாக, சமீப காலத்தில், டிரம்பிடம், பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை.சீன எல்லை பிரச்னை குறித்து, அந்த நாட்டு அதிகாரிகளுடன், இந்திய அதிகாரிகள் நேரடியாகவே பேச்சு நடத்தி வருகின்றனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'இந்திய பிரதமர் மோடியை மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். மிகச் சிறப்பாக பணியாற்றுகிறார். 'சமீபத்திய இந்திய பயணத்துக்குப் பின், இந்திய மக்களிடையே நான் மிகவும் பிரபலமாகி விட்டேன்' என, கூறிஉள்ளார்.

அமெரிக்கா சமரசம்: சீனா நிராகரிப்பு

'இந்திய - சீன எல்லை பிரச்னையில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:இந்திய - சீன எல்லை பிரச்னையில், மூன்றாவது நபர் தலையிடுவதை இரு நாடுகளுமே விரும்பவில்லை. எல்லை பிரச்னையை நாங்களே சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வதற்கான தெளிவான கொள்கை உள்ளது.ஏற்கனவே இது போன்ற பிரச்னைகள் எழுந்தபோது, இரு நாட்டு அதிகாரிகளுமே சுமுகமாக பேசி தீர்த்துக் கொண்டோம். இதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. எனவே, எல்லை பிரச்னைக்கு அமெரிக்காவின் சமரசம் தேவையில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.


சீன எல்லையில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்... எல்லையில் நடக்கும் பிரச்னை பற்றி, மத்திய அரசு, நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.ராகுல், எம்.பி., - காங்கிரஸ்

சீன படைகளை தடுத்த இந்திய ராணுவத்தினர்

லடாக் எல்லைக்குள் முன்னேற முயன்ற சீன ராணுவத்தினரை, இந்திய ராணுவ வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.



இந்தியா - சீனா எல்லையில், லடாக்கில், இந்திய ராணுவம், கடந்த மூன்றாண்டுகளாக சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், கால்வன் நலா பகுதியில், சீனா, தன் படையை குவிக்கத் துவங்கியதால், பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து, ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் உள்ள, கால்வன் நலா பகுதிக்கு முன்னேறி, இந்திய ராணுவத்தின், 14வது ரோந்து முனையத்திற்கு மிக நெருக்கமாக, படைகளை நிறுத்த வேண்டும் என்பதே அதன் திட்டம். இந்த முனையத்திற்கு அருகில் தான், இந்திய ராணுவம், பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பகுதியில் படைகளை நிறுத்தி, கட்டுமான பணிகளை தடுக்க வேண்டும் என்பதே, சீன ராணுவத்தின் நோக்கம்.
இதை புரிந்து கொண்ட இந்திய ராணுவம், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, கால்வன் நலா பகுதியில் படைகளை குவித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சீன ராணுவத்தினர், மேற்கொண்டு முன்னேறும் திட்டத்தை கைவிட்டனர். தற்போது, இந்திய ராணுவத்தின், 'கே.எம்., 120' முகாமில் இருந்து, 17 கி.மீ., துாரத்தில் சீன ராணுவம் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE