https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2548069.jpg

ஊரடங்கு முடிவை எடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு, நாளையுடன் முடிவடையவுள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனை விபரங்களை, பிரதமர் மோடியிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று விளக்கினார்.
இதையடுத்து,ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது மற்றும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை, மாநில அரசுகளிடமே ஒப்படைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 24ல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டது.

அதற்கு பின், மேலும் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத் போன்ற மாநிலங்களில், தொற்று அதிகரித்து வருகிறது.

கடுமையான பாதிப்பு

இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு, நாளையுடன் முடிவுக்கு வருகிறது. ஆனாலும், வைரஸ் பாதிப்பு குறையவில்லை. இதனால், ஊரடங்கை நீட்டிக்கும் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகளிடையே குழப்பம் நிலவுகிறது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.
தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இது போன்ற சூழ்நிலையில் ஊரடங்கை நீட்டித்தால், மக்களின் கடும் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என, மாநில அரசுகள் கருதுகின்றன. ஆனாலும், 'ஊரடங்கை முழுவதுமாக தளர்த்தக் கூடாது. முழுமையாக தளர்த்தினால், வைரஸ் பாதிப்பு, சமூக பரவலாக மாறி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, ஊரடங்கை நீட்டிக்கும் விஷயத்தில், மாநில அரசுகளின் கருத்தை கேட்கும் வகையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, தொலைபேசி வாயிலாக நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

முதல்வர்கள் விருப்பம்

ஆனாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல், இந்த முறை கூடுதலான தளர்வுகளை அறிவித்து, பொருளாதாரம் இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே, உள்நாட்டு விமான போக்குவரத்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை இயக்கவும், சில மாநிலங்களின் முதல்வர்கள் விருப்பம் தெரிவித்தனர்.கர்நாடகா உள்ளிட்ட சில மாநில அரசுகள், வழிபாட்டு தலங்களை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் தெரிவித்த ஆலோசனை, கருத்துக்களை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியிடம், நேற்று விளக்கிக் கூறினார்.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் வேகம், நாடு முழுதும் ஒரு மாதிரியாக இல்லை. மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகமாக உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் குறைவாகவே உள்ளது.

அரசு அறிவுறுத்தல்

குறிப்பாக, நாட்டில் நிலவும் மொத்த வைரஸ் பாதிப்பில், 80 சதவீதம், மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 30 மாநகராட்சி பகுதிகளில் தான் உள்ளது.
மற்ற பகுதிகளில் குறைவான பாதிப்பே நிலவுகிறது. எனவே, ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பாக, அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, மாநில அரசுகளே முடிவு எடுக்க அறிவுறுத்தப்படும்.
ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது மற்றும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தாங்களாகவே முடிவு எடுக்க, அதிகாரம் அளிப்பது என திட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த மாதம், 1ம் தேதியிலிருந்து, இந்த நடைமுறை அமலுக்கு வரும். இதன்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், 15 நாட்களுக்கு ஒருமுறை, தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, வைரஸ் பாதிப்புக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம்.
அதேநேரத்தில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஷாப்பிங் மால்

மேலும், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும். ஷாப்பிங் மால், தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும்.அரசியல் ரீதியான கூட்டங்கள், சந்திப்புகளுக்கான பொதுவான தடை, மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும். மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம், பள்ளிகள் திறப்பு ஆகியவை குறித்து, மாநில அரசுகள், நிலைமைக்கு தக்கபடி முடிவு எடுக்கலாம்.
வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது குறித்தும், மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். ஆனாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE