https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_254823120200530002725.jpg

சென்னையில் ஒரே நாளில் பலியானோர் 27 பேர் !

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில், 27 பேர் உயிரிழந்துள்ள
தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால், அரசு வெளியிட்ட அறிவிப்பில், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளது. இனிமேலாவது, உயிரிழப்பு குறித்தஉண்மையை மறைக்காமல், அரசு வெளியிடுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள, கொரோனா நோயாளிகளை பராமரிப்பதிலும் சிக்கல் காணப்படுவதாக, புகார் கூறப்படுகிறது. தமிழகத்தில், நேற்று வரை கொரோனாவால், 20 ஆயிரத்து, 246 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும், நேற்று ஒரே நாளில், 618 பேர் பாதிக்கப்பட்டனர்; மொத்தம், 13 ஆயிரத்து, 362 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, 113 பேர் உட்பட, தமிழகத்தில் இதுவரை, 154 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரமான சென்னை, கொரோனா நகரமாக மாறி உள்ளது

அடிப்படை வசதி

இந்நிலையில், சென்னையில் சராசரியாக தினமும், 1,000 பேர் வரை, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 400க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். மேலும் சென்னையில், 3.40 லட்சம் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை, மாநகராட்சி செய்து வருகிறது.

ஆனாலும் தொடர்ந்து, முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அதன்படி, சென்னையில், 24 மணி நேரத்தில், 27 பேர், கொரோனா வார்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நுண்ணறிவு பிரிவு காவலர், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றிய நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதில், 63 வயதான காவலரின் தாய், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
அதேபோல், கே.கே.நகரைச் சேர்ந்த, 38 வயது நபர், புளியந்தோப்பைச் சேர்ந்த, 88 வயது முதியவர், திருவொற்றியூரைச் சேர்ந்த, 51 வயது நபர், செங்குன்றத்தைச் சேர்ந்த, 50 வயது நபர், மயிலாப்பூரைச் சேர்ந்த, 58 வயது பெண், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த, 56 வயது நபர் உள்ளிட்ட, எட்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை

ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, மயிலாப்பூரைச் சேர்ந்த, 78 வயது முதியவர், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 59 வயது நபர், அமைந்தகரையைச் சேர்ந்த, 53 வயது நபர், எழும்பூரைச் சேர்ந்த, 74 வயது முதியவர் என, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், இரண்டு பேர்; ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஒருவர்; தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த, நான்கு பேர் என, 24 மணி நேரத்தில், 27 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த, செவிலியர் கண்காணிப்பாளரான ஜான் மேரி பிரிசில்லா, 58, என்பவர், 27ம் தேதி உயிரிழந்தார். அவரது மருத்துவ அறிக்கையில், கொரோனா என குறிப்பிடப்பட்ட நிலையில், 'அவருக்கு கொரோனா இல்லை' என, அரசு மறுத்துள்ளது.
அதேபோல், திருவொற்றியூரைச் சேர்ந்த, தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கு, தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால், அவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என, அரசு மறுத்துள்ளது.
சென்னையில் மட்டும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தினமும் சராசரியாக, 20 பேர் வரை உயிரிழந்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அறிக்கையில், 10க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் உயிரிழப்பு காட்டப்படுகிறது.
தற்போதைய சூழலில், சென்னையில் அனைத்து மருத்துவமனை கொரோனா வார்டுகளும் நிரம்பி உள்ளன. அதனால், தொற்று உடையவர்களில், 55 வயதுக்கு உட்பட்டவர்கள், அறிகுறி இருப்பவர்களை, வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை தரப்படுகிறது.
கொரோனா பாதித்த நாள்பட்ட நோயாளிகள், முதியவர்களுக்கு தான், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், உயிரிழப்போரில் பெரும்பாலானோருக்கு அறிகுறி மட்டுமே இருந்ததாக கூறி, உண்மை மறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு

அதேநேரத்தில், ஒன்றரை மாதங்களாக, இந்திய அளவில், கொரோனா உயிரிழப்பு சதவீதத்தை, 0.7 என்ற அளவில், தமிழகம் தக்க வைத்து வருகிறது; தொடர்ந்து தக்க வைக்க, உண்மையை அரசு மறைத்து வருகிறதா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இனிமேலாவது உண்மையை மறைக்காமல், கொரோனா உயிரிழப்புகளை, அரசு வெளியிடுவதுடன், உயிரிழப்பை தடுக்க, மருத்துவ சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொற்று பரவல் குறைவாக இருந்த நாட்களில், கொரோனா வார்டுகளில் சிகிச்சை சரியாக இருந்ததாகவும், தற்போது அந்த தரத்தில் சிகிச்சை இல்லை என்றும், நோயாளிகள் தரப்பில் புகார் சொல்லப்படுகிறது. அதனால், கொரோனா நோயாளிகளை, முறையாக பராமரிப்பதில் சிக்கல் காணப்படுகிறது.
இதற்கிடையே, கொரோனா வார்டுகளில், அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவதால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது.
இதுவரை, சென்னையில் மட்டும், இரண்டு கொரோனா நோயாளிகள், மருத்துவமனை வளாகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
அதேபோல, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்துாரார் என, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து, 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இதனால், கொரோனா நோயாளிகளை பராமரிப்பதில், அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தாமதமே தவிர மறைப்பு இல்லை!

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ள முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால், உயிரிழந்தோருக்கு, கொரோனா பரிசோதனை செய்த பின், அவர் கொரோனாவால் இறந்தாரா, இல்லையா என்பதை கண்டறிந்து வெளியிடப்படுகிறது.
அதனால், ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்படலாம். எந்த உயிரிழப்புகளையும் அரசு மறைக்கவில்லை. வெளிப்படையாக, தினமும் வெளியிட்டு வருகிறோம். கொரோனா வார்டுகளில் இருந்து, நோயாளிகள் தப்பி செல்வதை தடுக்கும் வகையில், நோயாளிகளுக்கு, தினமும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. அவர்கள் வெளியேறுவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா மற்றும் போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE