https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/death_in_ganga_river.jpg
கங்கை நீரில் மூழ்கி மரணம்

டிக் டாக் விபரீதம்: கங்கையில் மூழ்கி ஐந்து சிறுவர்கள் பலி

by

வாராணசி: கங்கை நதியில் குளிக்கும் போது டிக் டாக் விடியோ எடுக்க முயற்சித்த ஐந்து சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.  

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் வெள்ளியன்று காலை ஐந்து சிறுவர்கள் கங்கை நதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் டிக் டாக் விடியோ எடுக்க முயற்சித்ததாகவும், அதில் ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கியதாகவும் தெரிகிறது. அவனைக் காப்பாற்றும் பொருட்டு மீதமுள்ள சிறுவர்கள் நீரில் குதித்துள்ளனர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் நீரில் மூழ்கித் தேடுவோரைக் கொண்டு சிறுவர்களைத் தேடினர். சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு ஐவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை ராம் நகரில் உள்ள லால் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிறுவர்கள் இறந்தே கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிறுவர்கள் தவுசிப் (19), பர்தீன் (14), சயிப் (15), ரிஸ்வான் (15) மற்றும் சகிப் (14) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  

ஐந்து சிறுவர்கள் மரணமடைந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் சிறுவர்கள் குளிக்கச் சென்றுதான் இறந்தார்கள் என்றும், டிக் டக் விடியோ எடுக்கும்போது இறந்தார்கள் என்ற தகவலை மாவட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார்.