http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__167995631694794.jpg

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது: மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் உரை

சென்னை: நாடு முழுவதும் நாளை மறுதினத்துடன் (31ம் தேதி) 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி; வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி தொடர்ந்து பணிபுரிய விரும்பினால் ஆட்சியர்கள் உதவி செய்ய வேண்டும். தொழிற்சாலைகள், அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முறையாக ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா தொடர்புடையவர்களை கண்டறிந்து ஆட்சியர்கள் சிகிச்சை தர வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

சென்னை மாவட்டத்துக்குள் வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும். தளர்வு அறிவிக்கும் முன் ஆட்சியர்கள் தலைமைச் செயலரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். ஒருங்கிணைத்து செயல்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி; பாராட்டு தெரிவித்தார். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டு கூறினார். கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரடியாக பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.