http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__654506862163544.jpg

தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்; 2-ம் நிலை வாரிசுகள் என்பதை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2-ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் திருத்தம் செய்தது. ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து தீர்ப்பில் திருத்தம் மேற்கொண்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்திர கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, அவரது தம்பி ஜெ. தீபக் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். மேலும் தங்களை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க கோரி தீபாவும், தீபக்கும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதிமுகவின் புகழேந்தி தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்தனர். அதில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஜெயலலிதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியையும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் உரிமை உள்ளது. இவர்கள் இருவரும் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் திருத்தம் மேற்கொண்டது.