நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
by DINசென்னை: தமிழகத்தில் நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலோசனது முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 41 செல்சியஸ்ஸை ஒட்டிப் பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.