தனது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று: ராகவா லாரன்ஸ் விளக்கம்
by DINதனது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இதுபற்றி ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் செய்யும் சேவைகள் என் குழந்தைகளைக் காக்கும் என நம்புகிறேன். அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நன்றிகள்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஓர் அறக்கட்டளை நடத்துவதை அனைவரும் அறிவீர்கள். ஒரு வாரத்துக்கு முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தன. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்தபோது 18 குழந்தைகளுக்கும் 3 ஊழியர்களுக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இவர்களில் இருவர் மாற்றுத்திறனாளி ஊழியர்கள். இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
ஆனால் சிகிச்சையில் குழந்தைகளின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். காய்ச்சல் குறைந்து வெப்பநிலையும் சீராகியுள்ளது. வைரஸ் நெகடிவ் என பரிசோதனை முடிவு தெரிந்தபிறகு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சூழலில் உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நன்றி. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அவருடைய பி.ஏ. ரவி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கும் நன்றி.
நான் செய்யும் சேவைகள் என் குழந்தைகளைக் காப்பாற்றும். குழந்தைகள் விரைவில் மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள் என்று கூறியுள்ளார்.