ஆர்.எஸ்.பாரதி ஜாமீனுக்கு எதிரான வழக்கு: நாளை தீர்ப்பு
by DINதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார். அதேநேரத்தில் நீதிபதிகள், பட்டியலின் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் மூன்று மாதங்களுக்கு பின்னர் சனிக்கிழமை அதிகாலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான காவலர்கள், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார். இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.