முதல் முறையாக சனிக்கிழமை வழக்கு விசாரணைகளை நடத்தும் உயர் நீதிமன்றம்

by

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது போன சில வழக்குகளை நாளைய தினம் விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சாதாரணமாக வழக்குகளுக்காக உயர் நீதிமன்றம் வார நாட்களில் மாத்திரமே கூடுவதுண்டு. இலங்கையின் உயர் நீதிமன்ற வரலாற்றில் சனிக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாளைய தினத்தில் மாத்திரமின்றி எதிர்வரும் ஜூன் 13ம் திகதி சனிக் கிழமையும் உயர் நீதிமன்றம் சில வழக்குகளை விசாரணைக்கு எடுக்க உள்ளது என உயர் நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹாமுத்துகலகே வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 23ம் திகதி முதல் மே 6ம் திகதி வரையான காலத்தில் விசாரணைக்க எடுக்க முடியாது போன அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உட்பட சில மனுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காகவே உயர் நீதிமன்றம் சனிக்கிழமை கூடவுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவது தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கையில் கூறியுள்ளார்.