யாழ். மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு

by

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனால் எமது சபையின் எல்லைக்குட்படட பொதுச் சந்தைகளும் வர்த்தக நிலையங்களும் பூட்டிடப்பட்டன. இதன் காரனமாக எமக்கு இரண்டு மாதங்களுக்கு 18 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வருமானம் இல்லாத நிலையிலும் வரவு செலவுத்திடடத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக கொரோனா தொற்றின் போது கிருமி தொற்று நீக்கல் மற்றும் சுகாதார சேவைகளை முன்னெடுக்க 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எமக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்டிருந்த இருமாத முடக்கநிலையில் மொத்தமாக 20 மில்லியன் ரூபாய் நிதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக எமது வரவு செலவுத்திடடத்தில் 200 மில்லியன் ரூபாய் எதிர்பாக்கப்பட்ட வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக உரிமம் மாற்றத்தினால் கிடைக்கும் 130 மில்லையன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வரையான வருமானம் இழக்கப்படலாம். ஏனெனில் இம்முறை நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு வேறு வருமானங்களான வரிகள், சந்தை குத்தகை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்படட சந்தைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள்,வர்த்தகர்களுக்கு சில வரி விலக்குகளை சில நாட்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் தற்போது கழிவகற்றல் செயற்பாட்டிற்கு தனியாரின் உழவு இயந்திரங்களை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

கழிவகற்றல் செயற்பாட்டிற்கு மாநகர சபையின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் நாம் திண்ம கழிவகற்றலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மலையின் காரணமாக டெங்கின் தாக்கம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர எல்லைக்குள் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

எனவே நாம் அது தொடர்பிலும் சுகாதார திணைக்களம், பிரதேச செயலகத்துடன் இணைந்து அதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். சில பகுதிகளுக்கு இப்போதே புகையூட்டிடல்கள் இடம்பெறுகின்றன என து.ஈசன் தெரிவித்துள்ளார்.