தேர்தலை ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம்! நீதிமன்றத்தில் முன்வைக்கும் தேர்தல் ஆணைக்குழு

by

தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போனமை மற்றும் அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை, விரிவாக உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் என ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜாலிய பீரிஸ் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அமர்விற்கு அறிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பிலான சுகாதார வழிக்காட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் இந்த வழிக்காட்டல்களின் கீழ் தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகும் விதம் சம்பந்தமாக தான் ஆணைக்குழுவின் சார்பில் வாதங்களை முன்வைக்க எண்ணியுள்ளதாகவும் ஜாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது மற்றும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றதாக அறிவித்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று ஒன்பதாவது நாளாகவும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ர்புபுவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுக்களின் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய இரண்டு உறுப்பினர்கள் சார்பில் ஒரு சட்டத்தரணிக்கு மாத்திரமே வாதங்களை முன்வைக்க நீதியரசர்கள் அனுமதி வழங்கியிருந்ததுடன் இதனடிப்படையில் ஆணைக்குழுவின் சார்பில் சட்டத்தரணி ஜாலிய பீரிஸ் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

இதற்கு முன்னர் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் சார்பில் சட்டத்தரணி அஸ்னிக தேவேந்திர ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.இடையீட்டு மனுக்கள் தொடர்பான வாதங்கள் அனைத்து இன்றைய தினம் நிறைவுபெற்றன.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் திங்கட் கிழமைக்கு உயர் நீதிமன்றம் ஒத்தவைத்துள்ளது.