http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__31582057476044.jpg

சென்னையில் காவல் நிலையங்களில் வழுக்கி விழுந்து காயமுற்றவர்கள் எத்தனை பேர்?.. 2 வாரங்களில் பதிலளிக்க போலீசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் காவல் நிலையங்களில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்தவர்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகர போலீசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக நாகமுனி என்பவர் புகார் தெரிவித்தார். புகார் அளித்திருந்த நாகமுனி விசாரணைக்கு சென்ற போது குளியலறையில் வழுக்கி விழுந்ததாக தகவல் வெளியானது. நாகமுனி வழுக்கி விழுந்ததாக வந்த செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கில் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகரங்களில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றது? காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளதா? அதுமட்டுமல்லாமல் குளியலறைகள் முழுமையாக பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று கேள்வி எழுப்பி இது தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.