https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/28/original/train.jpg
கோப்புப்படம்

உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் ரயில் பயணத்தை தவிர்க்கலாம்: ரயில்வே அறிவுறுத்தல்

by

புது தில்லி: நீரிழிவு, ரத்தக் கொதிப்புப் போன்ற உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் ரயில் பயணத்தைத் தவிர்க்கலாம் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், நாட்டின் வேறு பகுதிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கும் தனித்தனியாக ரயில்களை இயக்கி வருகிறது இந்திய ரயில்வே.

இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு சில அறிவுறுத்தல்களை இந்திய ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இல்லாமல் ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறார்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் ரயில் பயணத்தைத் தவிர்க்கலாம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர், உடல்நலப் பிரச்னைகளோடு ரயிலில் பயணிக்கும் போது சில அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தலை ரயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும், உடல் நலக் குறைபாடுகளுடன் ரயிலில் பயணிக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே அதை தவிர்க்க மேற்கொண்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.