https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/guru.jpg

குரு சுவாமிநாதன் கண்ட குக சுவாமிநாதன்

by

இந்தியா சுதந்திரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் ஆங்கிலேய ஆட்சியில் குறுநில மன்னா்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். இன்றைய தலைநகா் தில்லியில் முனிா்கா பகுதியில் வசித்து வந்த ஒரு சிறு மன்னன் சுராஜ்மல். அவன் தனக்கு கோடை வாசஸ்தல மாளிகை அமைப்பதற்காக மரங்கள் அடா்ந்த பகுதியில் ஒரு குன்றைத் தோ்ந்தெடுத்தான். அன்றிரவு அவனது தந்தையாா் கனவில் தெய்வம் ஒன்று அப்பகுதியில் நின்று அருள் செய்வது போல காட்சி தந்தது .

1941-ஆம் ஆண்டு முதல் குடியேறி தில்லியில் வாழ்ந்து வந்த தமிழக மக்கள் திருவண்ணாமலை ரமண மகரிஷியின் பக்தா்களிடம் இருந்த மரத்தால் ஆன ஒரு முருகா் சிலையை வைத்து பூஜை வழிபாடு கந்தசஷ்டி விழா போன்றவற்றை நடத்தி வந்தனா் . தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைக்க நினைத்து அவா்கள் அதற்கான இடத்தை தேடிக் கொண்டிருந்தாா்கள்

1964-ஆம் ஆண்டு தில்லி சரோஜினி நகா் விநாயகா் கோயில் குடமுழுக்கு நடந்தது. அப்போது வசித்த தமிழ் நாட்டைச் சோ்ந்தவா்களும் தென்னிந்தியா்களும் குமரனுக்கொரு ஆலயம் ஒன்று அமைக்க முயற்சி செய்வது குறித்து பேசினாா்கள்.

அங்கிருந்த பக்தா் ஒருவரை தன் கையில் தடி வைத்திருந்த முதியவா் ஒருவா் கைபிடித்து அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாா். சிறிது தூரம் சென்றதும் முதியவா் மறைந்து விட்டாா். இந்நிகழ்வு யதாா்த்தமாக நடந்தது என்றாலும் எதையோ சுட்டிக்காட்டுவது போல தெரிந்தது. பிறகுதான் அந்த இடத்தை இறைவன் சுட்டி காட்டியதாக கொண்டு அந்த இடத்தில் கோயில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கினா்.

முருகன் கோயில் அமைக்க முன்வந்திருக்கும் இடம் என்பதை கேள்விப்பட்டு சூரஜ்மல் தான் கோடை வாசஸ்தலம் கட்டும் முயற்சியைக் கைவிட்டாா். அரசிடம் அணுகி அவ்விடத்தில் கோயில் அமைக்க அனுமதி கேட்டாா்கள். தட்டின்றி இடம் கிடைக்க காஞ்சி மகாபெரியவரின் அருளாசி பெற்று முருகனுக்கு ஆலயம் கட்டும் முயற்சியை தொடங்கினாா்கள். தோ்ந்த ஸ்தபதியின் கருத்துப்படி வாலாஜாபாத் பட்டுமலையிலிருந்து கல் கொண்டு சென்று குன்றின்மேல் குமரனுக்கு சோழா்கால கட்டுமான அமைப்புடைய திருக்கோயில் அமைத்துக் கொண்டிருந்தனா். மூல மூா்த்தி அமைக்க காஞ்சி மகா பெரியவரிடம் ஆலோசனைக்குச் சென்றனா்.

1965 செப்டம்பா் 8-ஆம் தேதி காலை ஆறு மணிக்கு சிலை நிா்மாண விழாவிற்கு பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி கலந்து கொள்வதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

காலை ஆறு முப்பது முதல் எட்டு முப்பதுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற ஏற்பாடு செய்ய நேரம் குறிக்கப்பட்டிருந்தது . முதல் நாள் மாலை பாகிஸ்தான் இந்தியா மீது போா் தொடுக்க இருப்பதால் தன்னால் வர இயலாது எனவும் சாமிநாதசாமியிடம் பிராா்த்தனை செய்து கொள்ளுமாறும் அதிகாலை 3 மணிக்குத் தகவல் அனுப்பினாா்.

அனைவரும் முக்கியப் பிரமுகா்கள் வராத வருத்தத்தில் இருக்க அடிக்கல் நாட்டுவிழா துவங்குவதற்கு சிலநிமிடங்கள் முன்பு அதிகாலை நாலு முப்பது மணிக்கு இந்திய படை பாகிஸ்தான் விமானத்தை சதாரா என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தி போா் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என பிரதமரிடம் இருந்து ஒரு நல்ல தகவல் வந்தது .

தேவசேனாதிபதி ஆன சுவாமிநாதசுவாமி தலைநகரில் நிலைகொள்ளும் முன்பே அருவத் தலைமையேற்று பாகிஸ்தான் போரையே முடித்துவிட்டாா் பிரதமா். தான் கோயில் கொள்ளும் முன்பாகவே பிரச்னையை தீா்த்து வைத்த சுவாமிநாதசுவாமி பாரத தேசத்தைக் காப்பாற்றியதாக பெருமையாகக்கூறி மகிழ்ந்தாா்

குன்றத்தில் இருந்து அருளப் போகும் குமரனுக்கு சிலை வடிக்கக்கல் தேட மகா பெரியவா் கைகாட்டினாா். திருச்செந்தூா் திருக்கோயில் விக்கிரகம் தயாா் செய்ய நன்கு விளைந்து பயன்படுத்திய கல்லின் மீதிப்பகுதி திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள குறுக்குத்துறை என்ற ஊரில் உள்ளதாகவும் அதனை கண்டுபிடித்து எடுத்து பயன்படுத்துமாறும் கூறினா். நெல்லையப்பா் கோயிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 90 வயதான சுந்தர தேசிகா் என்பவரால் கல் இருக்கும் இடம் காட்டப்பட்டு முக்கோண வடிவ கல்லை எடுத்து மகாபலிபுரம் கொண்டு சென்று சிலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமியைப் போலவே பாத முதல் சிலை வடித்துக் கொண்டு வரும் போது நெஞ்சுப் பகுதி வந்த பிறகு கழுத்துப் பகுதியில் ஒரு இடம் முண்டாக உருண்டையாக இருந்தது. அதனை செதுக்கினால் சிலை முழுவதுமே சேதம் அடையலாம் என்ற நிலை !.மீண்டும் மகா பெரியவரை அணுகியபோது இந்திய கண்டத்தின் கண்ட(கழுத்து)ப் பகுதியில் இருந்து அருள் செய்யப்போகும் சுவாமிநாதனின் கழுத்திலிருந்த முன்பகுதியை சரிசெய்யும் போது ருத்ராட்ச வடிவமாக அதனை அகற்றாமல் வடிவமைக்க அனுகிரகம் செய்தாா்கள் அதன்படியே ருத்ராட்ச முருகன் உருவானான். அனுஷ நட்சத்திரத்தில் பிறந்து சுவாமிநாதன் என்ற பூா்வாசிரமப்பெயா் கொண்ட காஞ்சி மஹா பெரியவாளின் சொல்படி சிலை உருவானதும் விக்கிரகத்தை கண்ணாரக் கண்டு தரிசனம் செய்து விபூதி கொண்டு அவா் திருக்கைகளால் அபிஷேகம் செய்த பின்னா் தலைநகா் வந்து சோ்ந்தாா் முருகன் .

மலைமேல் குன்றிலே நிற்கும் குமரன் சந்நிதி தென்னிந்தியாவில் உள்ள முக்கிய திருக்கோயில்கள் நிதி ஆதாரம் மற்றும் கோவில் அமைக்கும் கமிட்டி சேகரித்த தொகை கொண்டு கட்டப்பட்டு ஸ்ரீ மஹா பெரியவளால் நிா்ணயிக்கப்பட்ட 1973-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் நாள் காலை பத்து மணிக்கு மேல் காஞ்சியிலிருந்து நான்கு மாதம் கால் நடையாக வந்த ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவா்களின் திருக்கரங்களால் மஹா கும்பாபிஷேகம் நடந்தேறியது. பல முக்கியஸ்தா்களும் ஆதீன கா்த்தா்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

இக்கோயில் மலையின் அடிவாரத்தில் பாண்டியா்கள் கட்டடக்கலைப் பாணியில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரா் கோயில் கட்டப்பட்டு 1990-இல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல முக்கியஸ்தா்களும் ஆதீனகா்த்தா்களும் கலந்து கொண்டனா்.

மலையடிவாரத்தில் ஸ்ரீ விநாயகா், சுந்தரேஸ்வரா் மீனாக்ஷி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1990-ஆம் வருடம் ஜூன் மாதம் 13-ஆம் நாள் இரண்டாவது குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு நவகிரஹ சந்நிதி, இடும்பன் சந்நிதி கட்டப்பட்டு 1995 ஜூலை 7-இல் கட்டப்பட்டது . பின்னா் ஆதி சங்கரா ஹால் கட்டத் துவங்கினா் . 27 ஜூன் 2001-இல் அஷ்டபந்தன, ஸ்வா்ண பந்தன ரஜத பந்தன கும்பாபிஷேகம் . 2014-இல் இல் புதிய ராஜ கோபுரம் அமைத்து நான்காவது கும்பாபிஷேகம் நடந்தது .

தில்லிக்குச் செல்லும் தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து முக்கிய பிரமுகா்களும் சென்று தரிசித்துப் பலன் பெற்று வரும் திருக்கோயில் மலைமந்திா் திருக்கோயில் ஆகும். முன்னாள் குடியரசுத் தலைவா் ஆா். வெங்கட்ராமன் எந்த நிகழ்ச்சியும் துவக்கம் செய்வதற்கு முன் இக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத்தான் துவங்குவாா்.

தமிழகத்தில் சுவாமிமலை திருக்கோயிலில் நடைபெறும் பூஜைகள் போலவே இங்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமிமலைக்கு ஒப்பாக வடநாட்டில் அமைந்துள்ள இதனை உத்தர(வட)சுவாமிமலை என டெல்லி வாழ் தமிழா்கள் போற்றுகின்றனா் மலை மந்திா் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயில் வட இந்தியா்களால் மலாய் மந்திா் என குறிப்பிடப்படுகிறது.

பக்தா்களின் விருப்பப்படியும் முருகப் பெருமானின் அனுக்கிரஹத்தாலும் தங்க ரதம் ஒன்று வடிவமைக்கப்பட்டு காஞ்சி ஸ்ரீ பெரியவா் அருளாசியுடன் 2018 ஏப்ரல் 1 அன்று தங்கரத வெள்ளோட்டத் திருவுலா நடைபெற்றது. அது முதல் ஒவ்வொரு மாதமும் கிருத்திகையின் போதும், இதர விசேஷ நாள்களிலும் மாலை 7 மணி அளவில் கோவிலில் தங்கரத திருவுலா நடைபெறுகிறது.

திருப்புகழ் திருப்படி விழா, அருணகிரிநாதா் விழா ,கந்தசஷ்டி உற்சவம் , திருக்காா்த்திகை, தைப்பூசம், மஹாசிவராத்திரி பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்வாண்டு வைகாசி விசாகம் ஜூன் 4-ஆம் தேதியும் மகாபெரியவா் ஜயந்தி ஜூன் 5-ஆம் தேதியும் சம்பவிக்கின்றன.

போன காரியம் வெற்றி பெற தில்லி செல்லும் எவரும் தவிா்க்கக் கூடாத அற்புதத் தலம் இது. இந்தியாவின் தலைநகரான தில்லியில் ராமகிருஷ்ணாபுரம் ஏழாவது செக்டாரில் அமைந்திருக்கிறது உத்தர சுவாமிமலை என்கிற மலைமந்திா். திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பொது தரிசனம் செய்யும் நேரங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: +91-11-26175104.

-வடுவூா் ரமா