கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு ரூ.3400 விலை குறைவு விவசாயிகள் மனம்போல் வெடித்து பறக்குது பருத்தி: அரசு நிவாரணம் வழங்குமா?
குளத்தூர்: கொரோனா ஊரடங்கால் பருத்தி விலை கடந்த ஆண்டை விட ஒரு குவிண்டால் ரூ.3400 குறைவாக விலை போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பலர் பருத்தியை பறிக்காமலேயே செடியில் விட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலால் அவை வெடித்து காற்றில் பறக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதிகளில் பெரும்பாலானவை மானாவாரி நிலங்களாகும். மழை பெய்தால் கிடைக்கும் நீரை கொண்டே இப்பகுதிகளில் விவசாய பணிமேற்கொள்ளப்படுகிறது. மழையை நம்பி குளத்தூர் மற்றும் அருகிலுள்ள முத்துராமலிங்கபுரம், சனூர், வேடநத்தம், வெங்கடாசலபுரம் கிராம பகுதிகளில் கம்பு, சோளம், உளுந்து, மிளகாய் பயிர்களையும், இதற்கு அடுத்தபடியாக பருத்தியையும் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். கடந்த முறை இப்பகுதி விவசாயிகள் உளுந்து பயிரை அதிகமாக விதைத்தனர். ஆனால் குறைந்த அளவே விளசை–்சல் கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செழிப்பாக பெய்த பருவமழையால் பல கண்மாய்கள் நிறைந்தன. இதையடுத்து ஏராளமான விவசாயிகள் பருத்தி விதைத்திருந்தனர். தற்போது செடிகளில் பருத்தி காய்கள் வெடித்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. நன்றாக தண்ணீர் கிடைத்ததால் ஒரு ஏக்கருக்கு சுமார் 4 அல்லது 5 குவிண்டால் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
ஆனால் கொரோனா ஊரடங்கால் பருத்தியை பறிக்கவும், வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அனுப்பவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ஒரு சில விவசாயிகள் பறித்து வைத்துள்ள பருத்திக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.5600க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த வியாபாரிகள் குவிண்டால் ரூ.2200க்கு மட்டுமே விலை கேட்கின்றனர். சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் கிடைக்கும் விலை மிக குறைவு என்பதால் விவசாயிகள் பருத்தியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விட்டனர். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பருத்தி காய்கள் நன்கு விளைந்து வெடிப்பதால் பஞ்சுகள் காற்றில் பறந்து வீணாகின்றன. போதிய விலை இல்லாததாலும், பஞ்சுகள் காற்றில் பறப்பதாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த பல வருடங்களுக்கு முன்பு குளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தியை அதிகமாக சாகுபடி செய்தனர். பருவ மாற்றத்தால் நெல், பருத்தியை விடுத்து கம்பு, சோளம், மிளகாய், உளுந்து போன்றவைகளை சாகுபடி செய்தனர்.
கடந்த சில வருடங்களாக மீண்டும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது செடிகளிலிருந்து பருத்தியை பறிக்கும் பணியில் ஒருவருக்கு கூலியாக ரூ.200 கொடுக்கும் நிலையில் கொரோனா ஊராடங்கால் பறிக்கப்பட்ட பஞ்சை வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் மொத்த வியாபாரிகள் கடந்த வருடத்தை விட மிக குறைந்த விலைக்கே பருத்தியை எடுப்பதால் பறிப்பு செலவுக்கு கூட பற்றாமல் நஷ்டத்துக்குள்ளாகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பருத்திகளை பறிக்காமலே செடிகளில் விட்டுள்ளனர். மேலும் விலையில்லாமல் போன நிலையில் பருத்தி விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.