5 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள்: களத்தில் இறங்கியது மத்திய அரசு
புதுடில்லி: வெட்டுக்கிளிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு உதவ, மத்திய அரசு முன்வந்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், வெட்டுக்கிளிகள், விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இம்மாநிலங்களுக்கு உதவ, மத்திய அரசு முன்வந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க, 89 தீயணைப்புப் படைப்பிரிவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 120 கண்காணிப்பு வாகனங்கள், தெளிக்கும் உபகரணத்துடன் கூடிய, 47 கட்டுப்பாட்டு வாகனங்கள் மற்றும், 810 டிராக்டர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் மொத்தமாக, 2.22 லட்சம் ஏக்கருக்கும் அதிமான விளை நிலங்கள், சேதமடைந்துள்ளன. மஹாராஷ்டிராவில், வெட்டுக்கிளி கூட்டம், இரண்டாக பிரிந்து, நாக்பூரின் பர்சியோனி பகுதிக்கும், பண்டாராவிற்கும் சென்றன.இங்கு, பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் மரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஒடிசாவில், வெட்டுக்கிளிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, விவசாயிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேப்ப மர விதைகள் மூலம் தயாரிக்கப்படும் மருந்தை நீருடன் கலந்து, பயிர்களில் தெளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி பகுதியில், வெட்டுக்கிளிகள் நேற்று முன்தினம் இரவு படையெடுத்துள்ளன. இதையடுத்து, மாநில வேளாண் துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, இரவு முழுதும் ரசாயனங்கள் மூலம் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த பிரச்னைக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர்களுக்கு வழிமுறைகளாக வழங்கியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE