https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547915.jpg

தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓடும்? நாளை அறிவிப்பு

1

சென்னை : தமிழகத்தில், பஸ்கள் ஓடுவது எப்போது என்பது குறித்து, அரசு நாளை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும், கொரோனா பரவல் அதிகரித்தபடி உள்ளது. புலம்பெயர்ந்தோர், ரயில் மற்றும் விமான பயணியராலும், பல இடங்களில், புதிய தொற்று ஏற்படுகிறது. தற்போதைய சூழலில், பொது போக்குவரத்தை அனுமதித்தால், நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என, மருத்துவ குழுவினர், அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.அதேபோல, மாவட்ட கலெக்டர்களும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு, பஸ் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம் என, அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில், இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்துக்குப் பின், பஸ் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., நாளை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போக்குவரத்துக் கழக ஊழியர்களை தயார் நிலையில் இருக்கும்படி, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:கையுறை, முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும்படி, அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், போக்குவரத்து செயலர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், இதுவரை, தேவையான அளவில், அவை இருப்பு இல்லை. பல பணிமனைகளில், தண்ணீர் கூட வருவதில்லை. இந்நிலையில், எப்படி கை கழுவுவது? அரசு ஊழியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ள, பஸ் ஓட்டுனர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும், போதிய நோய் தடுப்பு முறைகளை, நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை. எனவே, நோயின் தாக்கம் குறையும் வரை, பஸ் போக்குவரத்தை துவங்காமல் இருப்பதே நல்லது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE