https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547908.jpg

சென்னையில் ஒரே நாளில் பலி எண்ணிக்கை- 14: அனைவரும் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்கள்

சென்னையில், நேற்று ஒரே நாளில், கொரோனாவுக்கு,14 பேர் பலியாகினர்.அனைவரும் கொரோனா சிறப்பு வார்டுகளில், சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவிலும், நேற்று மட்டும் பலியானோர் எண்ணிக்கை, 194 ஆக எகிறியது. நோய் மற்றும் இறப்பை கட்டுப்படுத்த, மாநில அதிகாரிகளுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்தி, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறைந்தாலும், தலைநகர் சென்னையில், அதிகரித்தபடி உள்ளது. இங்கு மட்டும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்படும் முதியோர், நாள்பட்ட நோயாளிகள், அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். நேற்று மட்டும், 14 பேர் இறந்தது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையும், 145 ஆக உயர்ந்துள்ளது.சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றிய, நங்கநல்லுாரைச் சேர்ந்த, 59 வயதான பெண், நேற்று உயிரிழந்தார். இவர், ஓய்வு பெற்ற நிலையில், மூன்று மாதத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. கொரோனா அறிகுறியுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார்.

சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், எட்டு பேர்; ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், ஐந்து பேர்; தனியார் மருத்துவமனையில், ஒருவர் என, 14 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.இது குறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், ஜெயந்தி கூறியதாவது:ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நேற்று கொரோனா அறிகுறியுடன் இருந்த, எட்டு பேர் இறந்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பின் தான், கொரோனா பாதிப்பால் இறந்தனரா என்பது தெரிய வரும்.அதேபோல, உயிரிழந்த செவிலியருக்கு, இரண்டு முறை எடுக்கப்பட்ட பரிசோதனையில், கொரோனா இல்லை என்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது. காய்ச்சல், நீரிழிவு, நுரையீரல் பிரச்னையால் இறந்தார். அவருக்கு மருத்துவமனை சார்பில், நினைவஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய அரசு ஆலோசனை

நான்காம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மும்பை, சென்னை, டில்லி, ஆமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கோல்கட்டா, இந்துார், ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தான், அதிக பாதிப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, அந்த, 13 மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், அவை அமைந்துள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன், மத்திய அரசின் கேபினெட் செயலர் ராஜிவ் கவுபா, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வைரஸ் பரவல் குறைந்து விட்டது. இந்த, 13 பகுதிகளில் தான் பாதிப்பு அதிகம் உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் அந்தந்த பகுதிகளில் எடுத்த நடவடிக்கைகள், முயற்சிகள், ஊழியர்களின் ஈடுபாடு, மக்களின் ஆதரவு உள்ளிட்டவை குறித்தும், விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் அதிகமாக உள்ள பகுதிகள், அதிக பலி ஏற்பட்டுள்ள பகுதிகள் என, ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன.

கண்காணிப்பு

கட்டுப்பாட்டு பகுதியை வரையறுத்து, அவற்றை சுற்றியுள்ள பகுதியிலும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். வீடு வீடாகச் சென்று சோதனை செய்வது, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பு உள்ளோரை கண்டுபிடிப்பது, அதிக அளவு பரிசோதனை, ஆய்வக நிர்வாகம் போன்றவற்றை ஒருங்கிணைத்து, வியூகம் அமைத்து செயல்பட வலியுறுத்தப்பட்டது.பாதிப்புக்கு ஏற்ப, வார்டு அளவில் அல்லது தெரு அளவில் அல்லது காவல் துறை எல்லை அளவில் பிரித்து, அந்தந்த பகுதிக்கு ஏற்ப, கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை கட்டாயமாக்க வேண்டும்.மிகவும் நெருக்கமான சாலைகள், குடிசைப் பகுதிகள் போன்ற, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளை கவனிக்க வேண்டும் என்று, வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

1.58 லட்சம் பேர் பாதிப்பு

நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் பதிவான பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது:நாடு முழுதும், கடந்த, 24 மணி நேரத்தில், புதிதாக, 6,566 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 333 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 194 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 4,531 ஆக உயர்ந்தது.இதுவரை, 67 ஆயிரத்து, 692 பேர் குணம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரில் குணம் அடைவோர், 42.75 சதவீதமாக உள்ளனர். மொத்த பலியில், மஹாராஷ்டிராவில் மட்டும், 1,897 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து, குஜராத்தில், 938; மத்திய பிரதேசத்தில், 313; டில்லியில், 303; மேற்கு வங்கத்தில், 289 பேர் பலியாகி உள்ளனர்.நோய் பாதிப்பிலும், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு, 56 ஆயிரத்து, 948 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கடுத்து, 18 ஆயிரத்து, 545 பேருடன், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. டில்லியில், 15 ஆயிரத்து, 257 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE