https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547911.jpg

மின் துறை செயல்பாடு: பிரதமர் மோடி ஆய்வு

புதுடில்லி: மின் துறை அமைச்சகத்தின் செயல்பாடு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தினார்.

மின் வினியோகத்தில் உள்ள பிரச்னைகள், மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைள் தொடர்பாக, அந்த துறைகளின் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

மிகவும் அவசியம்

அப்போது, பிரதமர் பேசியதாவது:மின் வினியோகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு, ஒரே மாதிரியான முறையில் தீர்வு காண்பது சரியாக இருக்காது.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின் வினியோக செயல்பாட்டை மேம்படுத்த, அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். மின் துறையை பொறுத்தவரை, நுகார்வோரை திருப்திபடுத்துவது, செயல் திறனை அதிகரிப்பது, நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது ஆகியவை மிகவும் அவசியம். மின் வினியோக நிறுவனங்கள், தங்கள் செயல் திறன் பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான், பொதுமக்களால், சம்பந்தப் பட்ட நிறுவனங்களின் கட்டணங்களை மற்ற நிறுவனங்களின் கட்டணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மின் தயாரிப்பு மற்றும் வினியோகம் தொடர்பான பணிகளுக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவி களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், சூரிய ஒளி மின்சாரத்தை, விவசாய துறை சார்ந்த அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கூரைகளில் மின் தகடுகள் பொருத்துவதில் நவீன தொழில்நுட்பத்தை கையாள வேண்டும்.

சுற்றுலா

ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது ஒரு நகர மாவது, முழுமையாக சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் நகரமாக இருக்க வேண்டும்; அது, தலைநகரமாகவோ அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவோ இருக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். இக்கூட்டத்தில், மின் கட்டண கொள்கை, மின் திருத்த சட்ட மசோதா உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE