https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547913.jpg

இந்திய - சீன எல்லையில் பதற்றம் கூடாது: ஐ.நா., சபை

1

நியூயார்க்: 'இந்திய - சீன எல்லையில், பதற்றத்தை அதிகரிக்கும் எந்த செயலையும் தவிர்க்க வேண்டும்' என, ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஐ.நா., செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ், பெரும் கவலை கொண்டுள்ளார்.இருவருக்கும் இடையே, யார் சமாதானப் பேச்சை நடத்துவது என்பதை, ஐ.நா.,வால் முடிவு செய்ய முடியாது. எனினும், மத்தியஸ்தம் செய்ய தயார் என, அமெரிக்க அதிபர், டிரம்ப் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை, சம்பந்தப்பட்ட நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த செயலையும், தவிர்க்க வேண்டும் என, ஐ.நா., சபை வலியுறுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, 'உலகின் பிரச்னைக்குரிய நாடாக, சீனா உருவாகி வருகிறது' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இது குறித்து, கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் கடல் பகுதிகளுக்கான, அமெரிக்க வெளியுறவு இணைச் செயலர், டேவிட் ஸ்டில்வெல் கூறியதாவது:உலகளவில், சீனா ஒரு பிரச்னைக்குரிய நாடாக மாறி வருகிறது. கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனா, அமெரிக்காவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ளது. ஹாங்காங்கை, தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. தெற்கு சீன கடல் பகுதியில், சீன ராணுவம்ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது, இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கும், சீனா தான் காரணம் என, சொல்லத் தேவையில்லை. சீனாவின் செயல்பாடுகள், தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும், இந்தியா உட்பட பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு, சீனாவின் ஆதிக்க மனப்பான்மையே காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE