https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547912.jpg

மக்களின் கஷ்டத்தை மத்திய அரசு உணரவில்லை

3

புதுடில்லி: ''ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், வலிகளையும், மத்திய அரசு சிறிதும் உணரவில்லை,'' என, காங்., தலைவர், சோனியா குற்றம் சாட்டியுள்ளார்.

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் உரிமையாளர்கள், அவற்றில் பணிபுரிவோர் ஆகியோரின் கஷ்டங்களை, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில், காங்கிரஸ், சமூக வலைதளங்களில், நேற்று, 'குரல் எழுப்பும்' பிரசாரத்தை துவக்கியது.

உணரவில்லை

பிரசாரத்தை ஒட்டி, காங்கிரஸ் தலைவர், சோனியா வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால், நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. 1.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால், பல கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. நெடுஞ்சாலைகளில், வெறுங்கால்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் வீடுகளுக்கு நடந்து செல்லும் கொடுமை தொடர்கிறது. ஆனால், மக்களின் வலியையும், கஷ்டத்தையும், மத்திய அரசு உணரவில்லை.அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார உதவிகளை உடனே செயல்படுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.அடுத்த ஆறு மாதங்களுக்கு, ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும், 7,500 ரூபாய் செலுத்த வேண்டும். அத்துடன், 10 ஆயிரம் ரூபாய், உடனே வழங்க வேண்டும்.

நிதியுதவி

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். கிராமங்களில் வேலைகளை உருவாக்கும் வகையில், மஹாத்மா காந்தி கிராம வேலை உறுதி திட்டத்தில் சேர்ந்துள்ளவர்களுக்கு, 200 நாட்களுக்கு, வேலை உறுதி செய்யப்பட வேண்டும்.சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடனுதவி அளிப்பதை விட, நிதியுதவி அளித்து, கோடிக்கணகான வேலை வாய்ப்புகளை காப்பாற்ற வேண்டும். அப்போது தான், நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். இவ்வாறு, சோனியா கூறியுள்ளார்.

பா.ஜ.,வுக்கு அறிவுரை சொல்லும் பிரியங்கா

''மஹாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னையில், தீவிர கவனம் செலுத்த, மத்தியில் ஆளுவோர் முன்வர வேண்டும்,'' என, பிரியங்கா கூறினார்.

காங்., பொதுச் செயலரான பிரியங்கா மேலும் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும், புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்களை, மனித பேரவலம் எனலாம். குழந்தைகள், பெற்றோரை, சைக்கிள்களிலும், மாட்டு வண்டிகளிலும் வைத்து, பல மைல் துாரத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். சிறப்பு ரயில்களில் பலர் உயிரிழக்கின்றனர். ரயில் நிலையத்தில், குழந்தை ஒன்று, இறந்து சடலமாக கிடக்கும் தன் தாயை எழுப்பி விடும் காட்சியை பார்க்கும் எவராலும் அழாமல் இருக்க முடியாது. நெஞ்சம் பதறுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கும் பா.ஜ.,வோ, மவுனமாக உள்ளது.
இம்மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ., அவர்கள் இக்கட்டான நிலையில் உள்ள போது, அதற்கான நன்றியை செலுத்த வேண்டும். உ.பி.,யைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, நாங்கள் அனுப்பிய சிறப்பு பஸ்களை ஏற்பதில், அரசியல் தவிர்க்கப்பட்டு உதவியிருக்க வேண்டும். ஆனால், அதைக்கூட செய்ய, பா.ஜ., முன்வரவில்லை.

மத்தியில் ஆள்வோரிடம், நான் உருக்கமாக வேண்டிக் கொள்வதெல்லாம், மஹாராஷ்டிரா போன்ற, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசுகளை கவிழ்ப்பதற்கான நேரம் இதுவல்ல. அம்மாநிலத்தில், கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த மாநில அரசு, போராடிக் கொண்டிருக்கிறது.அதற்கு உதவி செய்யாமல், ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளில், பா.ஜ., ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.அதற்கு பதிலாக, நாடு முழுதும் புலம்பெயர் தொழிலாளர்கள், நடைபிணமாக நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது பிரச்னைகளை தீர்க்க, நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு, பிரியங்கா கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE