https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547910.jpg

தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது; உணவு வழங்கவும் மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : 'புலம்பெயர் தொழிலாளர்கள் பயணம் செய்யும் பஸ் மற்றும் சிறப்பு ரயிலுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்கட்டணம் வசூலிக்கக் கூடாது; மாநில அரசுகளே இதை ஏற்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றையும் வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, இரண்டு மாதமாக நீடித்து வந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மார்ச் 24லிலிருந்து, நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்கு வரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினக் கூலிகளாக பணியாற்றி வந்த, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. குழந்தை, மூட்டை முடிச்சுகளுடன், பல நுாறு கி.மீ., துாரம் நடைபயணமாகவே சென்றனர். இவர்களில் சிலர் விபத்தில் சிக்கி பலியாகினர்.இதையடுத்து, தொழிலாளர்கள் வசதிக்காக, இந்த மாதம், 1ம் தேதியிலிருந்து, மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்தது.

செய்திகள்

பீஹாரில், பசியால், தன் தாய் இறந்து விட்டதை அறியாத ஒரு குழந்தை, அவரை எழுப்ப முயன்றது போன்ற ஒரு புகைப்படமும், சமூக வலைதளங்களில் வெளியானது.இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து சமீபத்தில் விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு, நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதாவது:புலம்பெயர் தொழிலாளர்களை ரயில், பஸ்களில் அனுப்பி வைப்பதில், ஏன் இவ்வளவு குழப்பம்?ஒரு இடத்தில், வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் உள்ளார் என தெரிந்தபின், அவரை ஒரு வாரத்துக்குள் அல்லது 10 நாட்களுக்குள், அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடியாதா?ஒரு மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அனுப்பி வைத்தால், மற்றொரு மாநில அரசு, அவர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? இது தொடர்பாக ஏதாவது கொள்கைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதா. நம் நாட்டில், இடைத்தரகர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். ஆனால், தொழிலாளர்களுக்கான கட்டண விஷயத்திலும் இடைத்தரகர்கள் இருப்பதை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. தொழிலாளர்களுக்கான கட்டணத்தை செலுத்துவது யார் என்பதில் உறுதியான முடிவு அவசியம். தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?உணவு சேமிப்பு கிடங்குகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வினியோகிக்க முடியுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.

சிறப்பு ரயில்கள்

முகாம்களில் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முகாம்களில் இல்லாமல், வெவ்வேறு இடங்களிலும் வாடகை வீடுகளில் வசிக்கும் தொழிலாளர்கள் நிலை என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து, துஷார் மேத்தா கூறியதாவது:இந்த மாதம் 1ம் தேதியிலிருந்து, 27 வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 3,700 சிறப்பு ரயில்கள், தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 91 லட்சம் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ரயில்களில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொழிலாளர்களை அழைத்துச் செல்ல எத்தனை நாட்களாகும் என்பதை, மாநில அரசு களுடன் ஆலோசித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒத்தி வைத்தனர்

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பல்வேறு இடங்களில் இருந்து, சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் மற்றும் பஸ்களில் செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை, மாநில அரசுகள், அவர்களிடம் வசூலிக்கக் கூடாது. கட்டண செலவை மாநில அரசுகளே பகிர்ந்து கொள்ள வேண்டும். சிறப்பு ரயில் எந்த மாநிலத்திலிருந்து புறப்படுகிறதோ, அங்கு, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதியை, அந்த மாநில அரசே வழங்க வேண்டும். பயணத்தின் போது, தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதியை, ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும். பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு எத்தனை நாட்களுக்குள் அழைத்துச் செல்லப்படுவர் என்பதை, ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பற்றிய விபரங்களை, ஒவ்வொரு மாநில அரசும், முறையாக பதிவு செய்ய வேண்டும். இதற்கான ஆவணங்களை முறையாக தயாரிக்க வேண்டும். இவ்வாறு விபரம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களை நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வைக்கக் கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். 'தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ரயில் வேண்டும்' என, மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வந்தால், ரயில்வே நிர்வாகம், உடனடியாக அந்த மாநிலத்துக்கு ரயிலை இயக்க வேண்டும்.தொழிலாளர்கள் யாராவது நடைபயணமாக சொந்த மாநிலங்களுக்கு செல்வது தெரிந்தால், அவர்களை உடனடியாக முகாம்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, பின், ரயில் அல்லது பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த மாதம், 5க்கு ஒத்தி வைத்தனர்.

வரலாறு காணாத பணிமத்திய அரசு பதில்

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடியதாவது:தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல, மத்திய அரசு வரலாறு காணாத வகையில் நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில், முந்தைய விசாரணையின் போது, மத்திய அரசு நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமே திருப்தி தெரிவித்திருந்தது. இதுவரை, 91 லட்சம் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள் விஷயத்தில் எதிர்மறையான தகவல்களையே சிலர் பரப்புகினறனர். இவர்கள் பேரழிவின் துாதர்களாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு அரசின் மீது, கொஞ்சம் கூட பற்று இல்லை. சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துக்களை எழுதுவது, தவறான தகவல்களை பேட்டியாக கொடுப்பது என செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தேசப்பற்று இல்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும், அமைச்சர்களும் இரவு பகலாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதெல்லாம் அவர்களது கண்களுக்கு தெரியவே இல்லை. இவர்கள், 'ஏசி' அறைகளுக்குள் அமர்ந்தபடி, இது போன்ற தவறான தகவல்களை பரப்புகின்றனர். தொழிலாளர்களுக்கு உதவ, 'ஏசி' அறையிலிருந்து, அவர்கள் வெளியில் வரலாமே...இவ்வாறு, அவர் வாதாடினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE