https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/kollidam.jpg
கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் தூர்ந்து போயுள்ளது. 

புதுமண்ணியாற்றின் கரைகளை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பலப்படுத்த கோரிக்கை

by

சீர்காழி: பாசனத்திற்கு தண்ணீர் வருவதற்குள் புதுமண்ணியாறு பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்களுக்கு பாசன வசதி தரும் முக்கியமான பாசன வாய்க்காலாக புதுமண்ணியாறு இருந்து வருகிறது. இந்த பிரதான பாசன வாய்க்கால் தெற்குராஜன் வாய்க்காலிலிருந்து குமரகுடி கிராமத்தில் பிரிந்து பழையாறு துறைமுகம் சென்று கடலில் கலக்கிறது. இந்த வாய்க்கால் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து தற்காஸ் கிராமம் வரை இரு கரைகளும் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெலிந்தும் தூர்ந்தும் போயுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் இப்பகுதியில் தூர்வாரப்படாமல் உள்ளது. 

எனவே தற்பொழுது குடிமராத்துப்பணிகள் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த வாய்க்கால் கேட்பாரற்று கிடக்கிறது. எனவே தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாகவே புதுமண்ணியாறு பாசன வாய்க்காலை தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து தற்காஸ் கிராமம் வரை தூர்வாரி ஆழ்படுத்தி கரைகளை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.