தாக்கப்பட்டவர்களை பார்வையிட்டார் வியாளேந்திரன்

by

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் மணல் ஏற்றி வந்தவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

இச்சம்பவத்தில் பதினொரு நபர்கள் தாக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இதில் எஸ்.பாலகுமார் என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏ.சிவகுரு, எஸ்.மகேஸ்வரி ஆகிய இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இதக்போது ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன் பிரசன்னமாயிருந்தார்.

வாகனேரி குளத்துமடு பகுதியில் மண் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரத்தினை வகுளாவலை சந்தியில் பொதுமக்கள் மறிந்து ஏற்றி வந்த மண்ணை பறித்ததுடன், அதன் பின்னர் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்தவர்களின் மண்ணை பறிமுதல் செய்ய சென்றவேளை ஏற்பட்ட வாக்குவாதத்தில் உழவு இயந்திரத்தில் வந்தவர்களால் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலேயே பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.