http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__935878932476044.jpg

சென்னையில் கொரோனா பரவலுக்கு அலட்சியம் காரணம்?.:நோயாளிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் கொடுமையை விட அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தால்  சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அதிக வேதனைக்கு ஆளாகுவதாக புகார் எழுந்துள்ளன. சென்னையில் கொரோனா அறிகுறியுடன் காய்ச்சலால் அவதிப்பட்ட ரமேஷ் என்பவர் பரிசோதனைக்கான அரசு மருத்துவமனைக்கு அலைந்துதிருந்த அவலம் அரங்கேறியுள்ளது.

அவரது தாயார் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரமேஷ் கொரோனா பரிசோதனைக்காக அரசின் சுகாதார மையங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டுள்ளார். பின்னர் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வீடு திரும்பினார். ரமேஷ் மூச்சுவிடுவதற்க்கே சிரமப்படும் நிலையில், அவரது தாயார் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்ய முடியாமல் ராகுல் என்பவரின் தந்தை அலைக்கழிக்கப்பட்டார். பின்னர் வடபழனியில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட நிலையில் அங்கு சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.

பின்னர் டீன் உதவியின் பெயரில் தான் சிகிச்சை கிடைத்தது. ஆனாலும் அடுத்த இரண்டு நாட்களில் ராகுலின் தந்தை இறந்துவிட்டார். இது போன்ற அதிகாரிகளின் அலட்சியமே சென்னையில் கொரோனா தீவிரமாக பரவ காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன.