கொரோனாவை பற்றி மக்களுக்கு அச்சம் வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்...தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி
சென்னை: நாளை மறுதினத்துடன் (31ம் தேதி) 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றார்.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது. அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி விலை உயராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகத்தில் ரூ.8.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.