https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/aanbhazhakan.jpg

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரி உயர்வை திரும்பப்பெற அதிமுக வலியுறுத்தல்

by

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரி உயர்வை திரும்பப்பெற அதிமுக வலியுறுத்தி உள்ளது. 

இது குறித்து புதுவை பேரவையில் அதிமுக சட்டப்பேரவை கட்சிக் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ஊரடங்கு உத்தரவினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டிய புதுவை மாநில முதல்வர் வே.நாராயணசாமி. மக்கள் மீது கூடுதல் வரி சுமையை உயர்த்தி மக்களுக்கு மிகப்பெரிய தொல்லையையும், துயரத்தையும் இந்த அசாதாரனமான காலகட்டத்தில் ஏற்படுத்தி வருகிறார். 

புதுவை மாநில வருவாய் மற்றும் நிதி சம்பந்தமாக கலால்துறை, போக்குவரத்து துறை, கேபிள் டிவி அரசுடமையாக்குவது. உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அரசு அதை செய்யாமல் மக்களுக்கு கூடுதல் வரிகளை சுமத்தி தொல்லையை கொடுத்து வருகிறது. 

கலால்துறையில் மட்டும் கார்ப்பரேஷன் அமைத்திருந்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வர வேண்டிய வருவாயை பெற அரசு நடவடிக்கை எடுக்காமல் கரோனா என்ற பெயரில் மது அருந்தும் மக்கள் மீது கூடுதல் சுமையை உயர்த்தியது. இதனால் மது அருந்துபவர்களுக்கு மட்டுமே நஷ்டம். மதுபான உற்பத்தியாளர்கள், மொத்த மதுபான உரிமையாளர்களுக்கு  அதிகபடியான வருவாயை மற்றும் அரசுக்கு வரவேண்டிய வருவாயை 30 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக ரூ.1000 கோடி வருமானத்தை இழந்து வருகின்றனர். இதன் மீது அரசு நடவடிக்கை இல்லை.

அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலில் வரவுள்ளது. இதை தடுக்க வேண்டும் என அதிமுக மற்றும் எதிர்கட்சிகள் எடுத்து கூறியும், எதைதப்பற்றியும் இந்த காங்கிரஸ் அரசு கவலைப்படாமல் மீண்டும் ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

கரோனா சம்பந்தமாக ஏப்ரல் மாதமே பெட்ரோல் விலை வரியை உயர்த்திய இந்த அரசு தற்போது பெட்ரோலுக்கு வரியை உயர்த்தி லிட்டருக்கு ரூ.3.32 காசு உயர்த்தியுள்ளது. டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2.01 காசு அளவிற்கு உயர்த்தியுள்ளனர்.

பெட்ரோல் டீசல் ரூ.500 கோடி வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருபுறம் மின்கட்டணம் உயர்வு, ஒருபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஒருபுறம் மதுபானம் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. 

திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு மக்களின் இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் வரிசுமையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்களுக்கு தொல்லையும் துயரத்தையும் செய்து வருகின்றனர்.

போக்குவரத்து துறையில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில வரி உயர்த்தம் செய்தாலே ஆண்டுக்கு கூடுதலாக சுமார் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். ஆம்னி பேருந்துகளுக்கு ஒரு இருக்கைக்கு காலாண்டு வரி ரூ.1200 தான். ஆனால் தமிழகத்தில் ரூ.3000 வசூலிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் ஓடும் பேருந்துகளில் காலாண்டு வரி ரூ.4000 ஆனால் புதுவையில் ரூ.1000 தான் வசூலிக்கப்படுகிறது.

தனியார் கல்லூரி பேருந்துகளில் ஒரு இருக்கைகக்கு 400-ல் இருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதுவையில் ரூ.100-லிருந்து ரூ.200  தான் வசூலிக்கின்றனர்.

தனியார் பள்ளிகள், வர்த்தக வியாபார நிறுவனங்களில் 1200 பேருந்துகள் ஓடுகின்றன. எனவே காலாண்டு இருக்கை வரி தமிழகத்திற்கும் புதுவைக்கும் 50 சதவீதம் குறைவு. தமிழகத்தில் வசூலிக்கப்படும் வரியில் 75 சதவீதம் வசூல் செய்தாலே ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அதைவிட்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை உயர்த்துவது வெட்கக்கேடான விசயம், உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் அதிமுக போராட்டத்தில் ஈடுபடும். புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் அரசு முழுமையாக தவறிவிட்டது. இதுவரை 4000 பேரை அனுப்பியுள்ளது. ஆனால் அவர்களுக்கான உணவுக்கு கூட வழிவகை செய்யவில்லை.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். முதல்வர் நாராயணசாமி வெற்று அரசியலை செய்து வருகிறார். இதற்கு ஆட்சியை விட்டு போய்விடலாம். இதுவரை குடியரசு தலைவர் ஆட்சி போல் தான் இருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஊரடங்கை பயன்படுத்தி மலிவான அரசியலை செய்து வருகிறார். மக்களின் கோரிக்கை மனுவை பெற்று அதை அரசிடம் அனுப்பி அதில் ஒரு மலிவான அரசியலை அரங்கேற்ற பார்த்தார். ஆனால் தமிழக உணவுதுறை அமைச்சர் காமராஜ் இதன் உண்மை நிலையை உயர்த்தியுள்ளார். மலிவு அரசியல் செய்வதை திமுக கைவிட வேண்டும்.

புதுவையில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசுக்கு திமுக ஆதரவு தருவது ஏன். மக்களிடத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றார் அன்பழகன்.