https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/5/original/ICC_T20_World_Cup-1563353554.jpg

டி20 உலகக் கோப்பை நடைபெறுமா?: தெரியலையேப்பா... என்கிறது ஐசிசி!

by

திட்டமிட்டபடி இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுமா?

இதுதான் எல்லா கிரிக்கெட் ரசிகர்களிடமும் உள்ள கேள்வி.

இதற்கான ஐசிசியின் பதில் - தெரியலையேப்பா...!

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுவதாக இருந்தது. விளையாட்டு வீரா்கள், அதிகாரிகள், போட்டி தொடா்புடையவா்கள், சா்வதேச சமூகத்தின் உடல்நலனைப் பாதுகாக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்பும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் இணையம் வழியாக நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜூன் 10 அன்று மீண்டும் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து முடிவெடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த வருடம் டி20 உலகக் கோப்பை நடைபெறாவிட்டால் இந்த வருடப் போட்டியை 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறும் 16 அணிகள்

1. பாகிஸ்தான்
2. இங்கிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. ஆஸ்திரேலியா
5. இந்தியா
6. நியூஸிலாந்து
7. இலங்கை
8. ஆப்கானிஸ்தான்
9. வங்கதேசம்
10. மேற்கிந்தியத் தீவுகள்
11. பப்புவா நியூ கினி
12. அயர்லாந்து
13. நெதர்லாந்து
14. நமிபியா
15. ஸ்காட்லாந்து
16. ஓமன்