2021 டி20 உலகக் கோப்பையை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்!
by DIN2020 டி20 உலகக் கோப்பை குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வருடம் நடைபெறுவதாக உள்ள டி20 உலகக் கோப்பையை அடுத்த வருடம் நடத்திக்கொள்வதாக ஐசிசியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரத்தின்படி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்பும் நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் இணையம் வழியாக நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜூன் 10 அன்று மீண்டும் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து முடிவெடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த வருடம் டி20 உலகக் கோப்பை நடைபெறாவிட்டால் இந்த வருடப் போட்டியை 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெறுவதாக உள்ள டி20 உலகக் கோப்பையை அடுத்த வருடம் நடத்திக்கொள்வதாக ஐசிசியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா பரவல் காரணமாகவும் மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்து ஐசிசிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக அறியப்படுகிறது.
இதனால் ஜூன் 10 அன்று நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.