https://s3.amazonaws.com/adaderanatamil/1590736835-unp-snj-2.jpg

ஐ.தே.கட்சி செயற்குழுவில் அதிரடி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்ய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (29) முற்பகல் 10.00 மணிக்கு சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த 102 பேர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை கையளித்திருந்தனர்.

இதன் காரணமாக குறித்த 102 பேரின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்படுவதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் அவர்க்ளுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த 102 பேரில் 99 உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்ய ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டியின் யாப்பினை மீறி செயற்குழுவின் அனுமதியின்றி வேறு கட்சியின் ஊடாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் காரணமாக அவர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.