http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__809917628765107.jpg

சீனாவுடனான எல்லை பிரச்சனை சந்தேகத்திற்கு வழிவகுக்குகிறது; தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்...!

புதுடெல்லி: லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில எல்லைப் பகுதிகளில் சீனா திடீரென தனது ராணுவத்தை குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் அருகே தனது விமானப்படை தளத்தை சீனா விரிவுபடுத்துவது,  திபெத்தில் உள்ள காரி குன்சா விமான நிலையம் அருகே பெரிய கட்டிடங்கள் எழுப்புவது செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில், சீனாவின் ஜெ-11, ஜெ-16 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை  அனைத்துக்கும் மேலாக நேற்று முன்தினம் சீன அரசின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் நாடு திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சாலை அமைப்பதை விரும்பாத சீனா, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், லடாக் யூனியன் பிரதேசத்தின் பான்காங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக்  மற்றும் தவுலத் பெக் ஓல்டி எல்லைப் பகுதிகளில் சீனா வேகமாக படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் தனது எல்லைக்கு உட்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.  இதனிடையே, லடாக்,  சிக்கிம், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் முக்கியமான கட்டமைப்பு பணிகளை மறுஆய்வுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தும்படி ராணுவ உயர் அதிகாரிகளுக்கு  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்  சிங் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களை சீனா அமைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுடன்  மட்டுமின்றி, இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையிலும் உள்ளது. சீனாவின் இந்த செயல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு  ஆலோசகர், முப்படைத் தளபதி, ராணுவத் தளபதிகள், உள்துறை செயலாளருடன் கடந்த 26-ம் தேதி அவசர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லைப்  பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் இருநாடுகளும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சமரசம் செய்து வைக்கத் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, சீனாவுடனான எல்லை பிரச்சனை குறித்து மோடி அரசு மௌனம்  காத்து வருவது, இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பல கோணங்களில் யூகத்திற்கும் சந்தேகத்திற்கும் வழிவகுக்குகிறது. எனவே இந்தியா - சீனா எல்லையில் தற்போதைய சூழ்நிலை குறித்து மத்திய அரசு மக்களுக்கு விளக்கம் அளிக்க  வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.