ஆந்திரத்தில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வருகை
by DINசென்னையின் குடிநீருக்காக ஆந்திரத்தில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்தடைந்தது. கண்டலேறு அணையில் விநாடிக்கு 1200 கன அடியாக திறக்கப்படும் தண்ணீர் 138 கன அடியாக வருகிறது. இன்று பிற்பகல் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடையும் என பொதுப்பணித்துறை தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீர்த் தேவைக்காகத் தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 12 டிஎம்சி தமிழகத்திற்குக் கிருஷ்ணா நதி நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என மொத்தம் 12 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டிய சூழ்நிலையில், கடந்த ஆண்டு தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டது. இதுவரை 7.5 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ள நிலையில், மீண்டும் நீர் திறக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கண்டலேறு அணையில் இருந்து, விநாடிக்கு 1200 கன அடியாக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.
இந்த கிருஷ்ணா நதி நீர், இன்று பிற்பகலில் பூண்டி ஏரிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.