ஜூன் 1-முதல் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியா?: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை...!
சென்னை: அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. நாளை மறுதினத்துடன் (31ம் தேதி) 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் பேசி வருகிறார்கள். முக்கியமாக தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்தும், ஒரு பேருந்தில் குறைந்தபட்சம் 20 முதல் 30 பயணிகள் மட்டுமே பயணம் செய்வது, முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்படும். மாநகர் மற்றும் வெளியூர்களுக்கும் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் குறைந்த அளவில் செல்ல அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதியில், சில முடிவுகள் எடுக்கப்படும். ஆனாலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் பழனிசாமி நாளை அல்லது நாளை மறுதினமே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயர்அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.