https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/ponmgal233.jpg

தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றம்: அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது பொன்மகள் வந்தாள்!

by

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராகியுள்ளது தமிழ்த் திரையுலகம்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரெட்ரிக் இயக்கியுள்ள படம் - பொன்மகள் வந்தாள். இசை - கோவிந்த் வசந்தா.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா துணிச்சலுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

Prime Video: Ponmagal Vandhal

இந்தப் படம் தொடர்பாகக் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பான செய்திகள் வெளியானதால் நேற்றிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படத்தைப் பலரும் பார்த்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். இதனால் முதல் நாளன்று சமூகவலைத்தளங்களில் பலரும் பேசும் படமாக மாறியுள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் விளம்பரத்துக்காக இணையம் வழியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிகா, ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கான காரணத்தைக் கூறினார். அவர் கூறியதாவது:

ஒரு படம் திரையரங்கில் வெளியாகி அதை ரசிகர்கள் கொண்டாடும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விடவும் வேறொரு பெருமை நடிகர், நடிகைகளுக்கு இருக்காது. 10 மாதங்களோ ஒரு வருடமோ கரோனா ஒழிந்தபிறகு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கும். அப்போது, ரசிகர்களுக்கு அவைதான் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக இருக்கப் போகின்றன.

திரையரங்குகள் மீண்டும் இயங்கும்போது வெளிவர பல படங்கள் காத்திருக்கின்றன. இந்தச் சூழலில் பொன்மகள் வந்தாள் படத்தை எப்போது வெளியிடுவது? அதற்கு இரண்டு வருடங்களாகிவிடும். எனவேதான் ஓடிடியில் வெளியிடுகிறோம். கதாநாயகியை மையமாகக் கொண்ட பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதன் மூலமாக 200 நாடுகள் வரை சென்றடைய முடிகிறது. தொழில்நுட்பத்தின் துணை இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. நிலைமையை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.