தச்சநல்லூர் அருகே பெண் வெட்டி கொலை: கணவர் காவல்நிலையத்தில் சரண்
by DINதிருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் இசக்கி(56). இவர் அப்பகுதியில் டீ மாஸ்டராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (54). இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாள்களாக தகறாறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பொன் இசக்கி தன்னுடைய மனைவி முத்துலட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர், அவர் அருகில் உள்ள தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து தச்சநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணயில், முத்துலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பொன் இசக்கி தனது மனைவியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதிகாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.