கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 2 கடற்படையினருக்கு கொரோனா
கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் 18 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அண்மையில் 399 கடற்படையினர் கொண்டுவரப்பட்டனர்.
இவ்வாறு கொண்டுவரப்படடவர்களில் 250 பேர் கேப்பாபுலவு விமானப்படை முகாமிலும் 149 பேர் இராணுவ முகாமிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவ்வாறு கொண்டுவரப்பட்டு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 250 பேருக்குமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் மொத்தமாக 20 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதோடு ஏனைய 230 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 149 பேருக்கான பரிசோதனைகள் நாளை (30) மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-