https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/namakkal.jpg
நாமக்கல் முதலைப்பட்டி மேம்பாலம் மீது ஆபத்தான முறையில் பயணித்த தொழிலாளர்கள்.    

நாமக்கல்: லாரிகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

by

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் லாரிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். காவலர்கள் இவற்றை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவலால் பல்வேறு தொழில்கள் மட்டுமல்ல, அதனை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதைக் காட்டிலும் சொந்த ஊர் சென்று தப்பிக்கொள்ளலாம். வீட்டில் இருந்தபடி ஆரோக்கியத்தையும், பிழைப்பையும் கவனித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். 

பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக தமிழகம் வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  சிறப்பு ரயில்கள் மூலம்  சொந்த ஊர் திரும்பி கொண்டிருக்கின்றனர். நடந்தே ஊருக்கு செல்லும்  முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் நடந்தும், லாரிகளில் தொற்றியபடியும் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

நாமக்கல் லாரிகள் மிகுந்த மாவட்டம். இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு அதிகளவில் லாரிகள் செல்கின்றன. இதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நாமக்கல்  சென்றுவிட்டால்  எப்படியாவது சொந்த ஊர் போய் சென்றடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளை முகாமிட தொடங்கியுள்ளனர்.

இங்கிருந்து முட்டை மற்றும் பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில், மேற்பகுதியில் அமர்ந்தபடி தினசரி 50–க்கும் மேற்பட்டோர் செல்லும் நிலை காணப்படுகிறது. சமூக இடைவெளியின்றி, உயிர் பயமின்றி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். காற்று, மழை, வெயில் அனைத்தையும் தாங்கிக் கொண்டு செல்லும் அபாயகரமான நிலையை காணமுடிகிறது. சோதனைச் சாவடிகள் பகுதிகளில் காவலர்கள் கவனிக்காதவாறு சாய்ந்து படுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு செல்வது கரோனா தொற்று பரவலுக்கு மட்டுமின்றி எதிர்பாராத விபத்துக்கும் வழி ஏற்படுத்தி விடும்.

இது தொடர்பாக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது; புலம்பெயர் தொழிலாளர்களை இரக்கப்பட்டு ஒரு சில ஓட்டுநர்கள் லாரியின் முன்பகுதியில் அமரவைத்து அழைத்து வரலாம். அதையே தவறு என ஓட்டுநர்களை கண்டிக்கிறோம். நாமக்கல் பகுதியில் இருந்து செல்லும் லாரிகளின் மேற்பகுதியில்  அமரவைத்து அழைத்து செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. பிற மாவட்டங்களில் இருந்து நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஒன்றிரண்டு லாரிகளில் அதுபோன்ற நிகழ்வுகள் இருக்கலாம். இது தொடர்பாக காவல் துறையின் கவனத்துக் கொண்டு செல்கிறோம். எங்களுடைய சங்க உறுப்பினர்களிடத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களை ஆபத்தான முறையில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம் என்றனர்.