https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/airbusa320.jpg

குடும்பத்தினர் நால்வருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்த ம.பி. தொழிலதிபர்

by

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மதுபான ஆலை அதிபர், தன் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் போபாலில் இருந்து தில்லி செல்வதற்காக 180 பேர் பயணிக்கக் கூடிய பெரிய விமானத்தை ஏற்பாடு செய்துள்ளார். 

கரோனா நோய்த்தொற்று சூழலில் விமான நிலையம் மற்றும் விமானம் ஆகியவற்றில் மக்கள் கூட்டத்திடையே தனது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பதை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பாக அவர்கள் செல்வதற்காகவும் அவர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். 

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: 
போபாலைச் சேர்ந்த மது ஆலை அதிபரின் மகள் தன் இரு குழந்தைகளுடன் கடந்த மார்ச் மாதம் தில்லியிலிருந்து போபால் வந்திருந்தார். இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் அவரின் மகள் மீண்டும் தில்லி திரும்ப இயலாமல் இருந்தது. 

இதனிடையே உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த 25}ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து தன் மகள் அவரின் இரு குழந்தைகளுடன் பாதுகாப்பாக பயணிப்பதற்காக மது ஆலை அதிபர் போபாலில் இருந்து தில்லிக்கு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். 

அவர் ஏற்பாடு செய்திருந்த ஏ320 ரக விமானத்தில் 180 பேர் வரை பயணிக்கலாம். ஆனால், கடந்த 25}ஆம் தேதி தில்லியிலிருந்து போபால் வந்த விமானத்தில் மது ஆலை அதிபரின் மகள், அவரின் இரு குழந்தைகள், அவர்களின் பணிப்பெண் ஆகிய 4 பேர் மட்டுமே மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றனர். அந்த விமானத்தில் சென்றவர்களுக்கு மருத்துவ ரீதியிலான அவசரம் இருந்ததாகவும் தெரியவில்லை. ஏர்பஸ் 320 ரகத்தைச் சேர்ந்த விமானத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்ய ரூ.20 லட்சம் செலவாகும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.