https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/money.jpg

ஆர்பிஐ சேமிப்பு பத்திரத் திட்டம் திடீர் நிறுத்தம்: ப.சிதம்பரம் கண்டனம்

by

புது தில்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சேமிப்பு பத்திரத் திட்டத்தை மத்திய அரசு திடீரன நிறுத்தியது மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய நடவடிக்கை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 
வருங்கால வைப்பு நிதி, சிறு சேமிப்பு கணக்குகள் ஆகியவற்றுக்கான வட்டியை குறைத்துள்ள மத்திய அரசு, தற்போது அடுத்தகட்டமாக ஆர்பிஐ சேமிப்பு பத்திரத் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது சேமிப்பில் ஈடுபடும் பொதுமக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை மிகவும் பாதிக்கக் கூடிய நடவடிக்கையாகும். 

எனவே, ஆர்பிஐ சேமிப்பு பத்திரத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரி மத்திய அரசை குடிமக்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை கடந்த 2018 ஜனவரியில் இதேபோல் ஆர்பிஐ சேமிப்பு பத்திரத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. 

அப்போது அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். மறுநாளே அந்தத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் கொண்டுவந்தது. ஆனாலும், அந்த சேமிப்புக்கான வட்டியை 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாகக் குறைத்துவிட்டது. வரிப் பிடித்தம் போக அந்த பத்திரத் திட்டத்தில் 4.4 சதவீத அளவே பலன் கிடைக்கும். 

தற்போது அந்தத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிறுத்தி விட்டது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு அரசும் தனது குடிமக்களுக்காக பாதுகாப்பான, இடர் அற்ற ஒரு முதலீட்டு வாய்ப்பை வழங்க வேண்டும். கடந்த 2003}ஆம் ஆண்டு முதல் ஆர்பிஐ சேமிப்பு பத்திரம் அத்தகைய ஒரு வாய்ப்பாக இருந்து வந்தது என்று ப.சிதம்பரம் அதில் கூறியுள்ளார். 

ஆர்பிஐ பத்திரத் திட்டத்தை மே 28-ஆம் தேதியுடன் நிறுத்துவதாக மத்திய அரசு புதன்கிழமை திடீரென அறிவிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.